தற்போதைய செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு வரும்போது முதல் ஆளாக நானே குரல் கொடுப்பேன் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

கோவை,

இஸ்லாமிய மக்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் அவர்களுக்காக குரல் கொடுக்க முதல் ஆளாக நானே களத்தில் நிற்பேன் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறினார்.

இஸ்லாமிய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தீவிர முயற்சியால் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட சுகுணாபுரம் பாலக்காடு சாலையில் 1.75 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.2.21 கோடி மதிப்பீட்டில் இஸ்லாமியர்கள் கபர்ஸ்தான் (மயானம்) அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுற்றுச்சுவர், நடைபாதை, தொழுகைக் கூடம், மற்றும் கூடுதலாக முன்புற மேற்கூரை, மின் வசதி, தண்ணீர் வசதி மற்றும் கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கபர்ஸ்தானை கோவை மாவட்டம் ஆத்துப்பாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி அனைத்து இஸ்லாமியர் கூட்டமைப்பு மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் இஸ்லாமியர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

இஸ்லாமிய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று குனியமுத்தூர் பகுதியில் தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத விதத்தில் எல்லா வசதிகளுடனும் கபர்ஸ்தான் அமைத்து கொடுத்துள்ளோம். தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு கழக ஆட்சியில் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசால் ஹஜ் பயணத்திற்கான மானியம் நிறுத்தப்பட்ட போது அதை மீண்டும் பெற்றுத் தந்தது கழக அரசு. கடந்த 23-ந்தேதி கோவைக்கு வந்த முதலமைசச்ர் இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.6 கோடியாக இருந்த ஹஜ் மானியத்தை ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கினார்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் உத்தரபிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களில் இதுவரை ஹஜ் மானியம் வழங்கப்படவில்லை. மேல் சபை எம்.பி.க்கான வாய்ப்பு வந்தபோது அதில் முகமது ஜானுக்கு வாய்ப்பளித்து எம்.பி ஆக்கியவர் நமது முதல்வர். நிவர் புயலால் சேதமான நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைக்க கோரிக்கை வைத்தவுடன் ரூ.5.37 கோடி நிதி யை உடனே ஒதுக்க உத்தரவிட்டவர் முதல்வர்.

மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் டவுன் காஜிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் தாய் உள்ளத்தோடு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்ட நிர்வாக மானியத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியது அம்மாவின் அரசு. மேலும் பள்ளிவாசல்கள், தர்காக்கள், வஃபு நிறுவனங்களை சீரமைக்கும் பணி செய்தது கழக அரசு.

கோவை நகர் பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலங்களான ஆத்துப்பாலம், சேரன் நகர், காளவாய், குறிச்சி பிரிவு ஆகிய பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டி கொடுத்து அவர்களுக்கு தேவையான மின் விளக்குகள், கபர்ஸ்தான் உள்ளே கபர் அடக்கம் செய்யப்படுவதற்காக மேற்கூரை அமைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹஜ் பயணம் செல்லும் பயணிகள் கடவுச்சீட்டு, உடமைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பணிகளை சிரமமின்றி தங்கி மேற்கொள்ள சென்னையில் ஹஜ் இல்லம் கட்டும் பணிக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்தது கழக அரசுதான்

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்தியாவிலேயே முதன்முதலாக உயர்மட்ட கமிட்டி அமைத்தது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். பள்ளி வாசல்கள், தர்காக்கள், வஃபு நிறுவனங்களை பழுது பார்த்து புனரமைக்க மானியத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியது அம்மாவின் அரசு.

அன்று சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். இஸ்லாமிய மக்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் எனது பதவியை பற்றி கவலை படமாட்டேன். இஸ்லாமிய மக்களுக்காக குரல் கொடுக்க முதல் ஆளாக களத்தில் நிற்பேன். என்றும் எப்பொழுதும் உங்களின் சகோதரனாக நான் இருப்பேன்.

அதுபோல் தேர்தல் வரும்போது வேல் பிடிக்கும் ஆள் நானில்லை. நான் மாலையிட்டு சபரிமலைக்கு போகிறேன். எல்லா கோயிலுக்கும் போகிறேன். மதத்தை வைத்து அரசியல் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.கழகத்தை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. கொள்கை என்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வகுத்த பாதையில் முதலமைச்சர் எடப்பாடியார் செயலாற்றி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.