உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி ?
சென்னை,
தன்மானம் இல்லாதவர்கள் தான் விமர்சனம் செய்வதாக தெரிவிக்கும் ஸ்டாலின் உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளார்கள். அதிலிருந்து மீள முடியாத சூழ்நிலையிலே இன்றைக்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள். வீடுகளுக்கு சுமார் 52 சதவீத அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தெரிகிறது.
இன்றைய தினம் பத்திரிகையில் மின்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை குறைப்பதற்கு முயற்சி செய்வதாக சொல்லியிருக்கிறார். எனவே மின் கட்டண உயர்வை இந்த அரசு கைவிட வேண்டும். ஏன் என்றால் இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று இருந்த காரணத்தினால் வேலை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த மின் கட்டண உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்.
வீட்டுவரி இன்றைக்கு 50 சதவீதம், 75 சதவீதம், 100 சதவீதம், கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருவர் 2 ஆயிரம் சொத்துவரி செலுத்தியிருந்தால் தற்போது 4 ஆயிரம் சொத்துவரி செலுத்த வேண்டும். 100 மடங்கு அதிகம்.
அதுபோல கடை வைத்திருப்பவர்களுக்கு 150 சதவீத உயர்வு. அவர்கள் 5 ஆயிரம் முன்பு கட்டியிருந்தால் இன்றைக்கு 12,500 ரூபாய் கட்ட வேண்டிய நிலை. கொரோனா தொற்று இருந்த காரணத்தினால் வியாபாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் இந்த வேளையிலே மக்கள் தலைமீது மிகப்பெரிய சுமையை சுமத்தியுள்ளது இந்த அரசு. இந்த சொத்து வரியையும் கைவிட வேண்டும்.
இன்றைக்கு மக்களின் நிலையை புரிந்துகொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும். அதற்கு மாறாக மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு, வேதனைப்படும் அளவிற்கு, துன்பபடுகின்ற அளவுக்கு சொத்துவரியை உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது தன்மானம் இல்லாதவர்கள் தான் இந்த ஆட்சியை விமர்சனம் செய்வதாக தெரிவிக்கிறார். நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்திலே உச்சநீதிமன்ற நீதிபதியே தெரிவித்துள்ளார். இதற்கு என்ன சொல்லப்போகிறார் என தெரியவில்லை.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.