தற்போதைய செய்திகள்

உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை திசை திருப்புகிறார் ஸ்டாலின் : அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல்

மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆனால் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை திசை திருப்புகிறார் ஸ்டாலின் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெப்படையில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு அலுவலகத்தை கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்போது மழைக்காலம் என்பதால், அனல் மின் உற்பத்திக்காக ஒரு மாதத்திற்கு தேவையான நிலக்கரி இருப்பில் உள்ளது. இப்போது உள்நாட்டு நிலக்கரி தேவையான அளவில் கிடைப்பதால் நிலக்கரி பற்றி எவ்வித பிரச்சினையும் கிடையாது. கொரோனா காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் பெரிய அளவிலான ஆலைகள் இயங்காததால் குறைவான மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் நிலக்கரி பற்றாக்குறை ஏதுமில்லை.

புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டு நிவர் புயல் பாதிப்புகளை சரி செய்துள்ளது. புயல் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 100 சதவிகிதம் அடுத்த நாளே சென்னையில் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டன. முதல்வர் நேரடியாக ஆய்வு செய்து அனைத்து மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியதால் தண்ணீர் வடிந்த பிறகு மின் இணைப்புகள் சரி செய்யப்பட்டன. செம்மஞ்சேரி பகுதியில் நீர் வடிந்த பிறகு மின்சார வினியோகம் சீராக வழங்கப்படும்.

மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதலமைச்சர் நீர் தேங்கும் பகுதிகளில் நீர் வடிந்த பிறகு சென்னை புறநகர் பகுதிகளில் புதைவட மின்கம்பிகள் ஆக மாற்றி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சித் திட்டங்களை மாநில அரசு முனைப்புடன் முன்னெடுத்து செல்கிறது முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

தமிழக முதல்வரின் ஆட்சியில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பதால் பல குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலினுக்கு என் மீதும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதும் தனிப்பட்ட வன்மம் உள்ளதால் பல்வேறு அவதூறுகளை கூறி வருகிறார். மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கி அந்தந்த மாநிலங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது வழக்கமான நடைமுறை தான். ஆனால் இது குறித்து ஸ்டாலின் குறை கூறுவது தவறு. ஏற்கனவே திமுக ஆட்சியில் இருந்தபோது 18 மணி நேர மின்சார தடை இருந்தது. அவர்கள் வெளியில் மின்சாரத்தை வாங்கி வழங்கவில்லை. தற்போது மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளதால் மக்களை திசை திருப்ப பல்வேறு உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஸ்டாலின் கூறி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

பேட்டியின்போது பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான சந்திரசேகர் உட்பட தகவல் தொழில்நுட்பப்பிரிவு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.