தற்போதைய செய்திகள்

உப்பனாறு வாய்க்காலை தூர் வாராவிட்டால் பொதுமக்களை திரட்டி முற்றுகை போராட்டம் – புதுச்சேரி அரசுக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை

புதுச்சேரி

உப்பனாறு வாய்க்காலை தூர் வாராவிட்டால் பொதுமக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி அரசுக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற கழக குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ.  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட துணை நிலை ஆளுனருக்கு அதிகாரம் உண்டு என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, ஆளுனரும், முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற வழக்கமான ஒரு அறிவுரையையும் கூறியுள்ளது.

ஆளுனருடன் போட்டி போட்டு தொடர்ந்து மோதல் போக்கையும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பையும் கொண்டுள்ள முதல்வர் நாராயணசாமியால் இதற்கு மேல் எந்த பிரச்சினையிலும் இணைந்து செயல்பட முடியாத நிலை உள்ளது. எனவே புதுச்சேரியின் நலன் கருதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

கொரோனாவிற்கு போதிய அளவு புதுச்சேரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி முகக்கவசம் வழங்குவது, ரத்த பரிசோதனை செய்வது, உள்ளிட்டவைகளை மேற்கொண்டு வருகிறார். பிரான்சில் அதிகம்பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். ஆனால் யாரையும் பரிசோதிப்பதில்லை. கொரோனா அறிகுறி இருந்தால் 15 நாட்கள் தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனால் எந்தவித கண்காணிப்பும் மேற்கொள்ளப்படவில்லை. புதுச்சேரிக்கு டெல்லி, பெங்களூர், ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரயில்கள் வருகின்றன. அப்படி வரும் பயணிகளிடமும் எந்தவித மருத்துவ சோதனையும் நடத்துவதில்லை.

கொடுக்காப்புளி சாப்பிட்டால் கொரோனாவை தடுக்கலாம் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் கூறியுள்ளார். இதை சித்தா, ஆலோபதி மருத்துவர்களும், சுகாதாரத்துறையும் ஏற்றுக் கொள்கிறதா? ஏனென்றால் சட்டமன்ற உறுப்பினர் கூறுவதை மக்கள் பின்பற்றுவார்கள். எனவே இது குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட வேண்டும். உப்பனாறு வாய்க்கால் தூர்வாரப்படாததால் சேரும், சகதியுமாகி கொசு உற்பத்தி கூடமாக உள்ளது. 4 தினங்களுக்குள் தூர்வாரப்படாவிட்டால் மக்களை திரட்டி பொதுப்பணித்துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவேன்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.