சிறப்பு செய்திகள்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும்

அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை

மதுராந்தகம் அருகே அரசு பேருந்து, லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி எடப்பாடி கே.பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் சிகிச்சை பெறுவோர் பூரண நலத்துடன் விரைவில் வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன், இவ்விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

வாகன ஓட்டிகள் தங்களுடைய, தங்கள் குடும்பத்துடைய எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கண்ணும் கருத்துமாக எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்கி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.