தற்போதைய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

மதுரை

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வுக்கு வரும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகர் மாவட்ட கழம் சார்பில் கோரிப்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.வினர் ஏற்கனவே 2006 சட்டமன்ற தேர்தலில் இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று கூறினார்கள். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல பொய்யான வாக்குறுதி கொடுத்து தான் வெற்றி பெற்றனர். எதையும் நிறைவேற்றவில்லை.

அதேபோல் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றியது போல் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களிடம் கூறி தி.மு.க.வினர் வெற்றி பெற்றுள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று கூறியவர்கள் இன்று மழுப்பலான பதிலை கூறி வருகின்றனர். நீட் தேர்வுக்கு இதுவரை எந்த பதிலும் கூறவில்லை.

மகளிருக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று கூறினார்கள். ஆனால் இது பற்றி சட்டசபையில் எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் தி.மு.க மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சியை கைப்பற்றினோம். மதுரை மாநகராட்சியில் தி.மு.க. இருந்த போது நிதிநிலை சீர்கெட்டு இருந்தது. அதை எல்லாம் சரி செய்ய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ரூ.250 கோடி நிதி வழங்கினார். அதேபோல் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் திட்ட பணிகளை நாம் கொண்டு வந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் மதுரைக்கு நாம் செய்த சாதனைகளை மக்களுக்கு நீங்கள் எடுத்துக்கூற வேண்டும்.

தற்பொழுது உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது மதுரை மாநகராட்சியில் வெற்றி பெற தி.மு.க.வினர் பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பார்கள். பல தில்லுமுல்லுகளையும் செய்வார்கள். தி.மு.க. வாக்குறுதியை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

ஒரு முறை தோல்வி அடைந்தால் அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவோம் என்பது நமது இயக்கத்தின் வரலாறு. ஆகவே வருகின்ற உள்ளாட்சித்தேர்தலில் மதுரையில் 100 சதவீத வெற்றியை பெறும் வகையில் நீங்கள் களப்பணி ஆற்ற வேண்டும். தி.மு.க.வின் தில்லுமுல்லுகளை தகர்த்தெறிந்து களப்பணி ஆற்றி கழகத்திற்கு வெற்றியை தேடித்தர வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் ஜெ.ராஜா, மாவட்ட கழக பொருளாளர் அண்ணாதுரை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சக்தி மோகன், முன்னாள் துணை மேயர் திரவியம், கழக செயற்குழு உறுப்பினர் சண்முகவள்ளி, கழக மாணவரணி இணை செயலாளர் குமார், கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.