சிறப்பு செய்திகள்

உழைப்பு பற்றி ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை,ஜன.24-

உழைப்பு பற்றித் ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது என்றும் குறுக்கு வழியை கொண்டு ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோயம்புத்தூர் – செல்வபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:-

முதலில் 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்று சொன்ன ஸ்டாலின் நேற்றையதினம் ( 22 ந் தேதி) 200 தொகுதி என்று வந்துவிட்டார். 10 நாட்களில் 34 தொகுதிகள் காணாமல் போய்விட்டது.

இன்னும் அடுத்த கூட்டத்தில் எத்தனை தொகுதிகள் குறையுமென்று தெரியவில்லை. கடைசிக் கூட்டத்தில் ஒன்றுமே இருக்காது. அவர் சொல்லிக் கொண்டு வருவதைத்தான் நான் சொல்கிறேன். கழகத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.

இது மக்கள் ஆட்சி. மக்கள்தான் முதலமைச்சராக இருக்கின்றார்கள். அவர்கள் உத்தரவை நிறைவேற்றும் ஏவல் ஆளாக நான் இருக்கின்றேன். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருவன் முதலமைச்சரானால் எவ்வாறு மகிழ்ச்சியடைவீர்களோ அதேபோல் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, கீழ் நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு வரவேண்டுமென்றால் எவ்வளவு கடின உழைப்பு இருக்க வேண்டுமென்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அயராது உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

ஸ்டாலின் 1989-ல் சட்டப்பேரவை உறுப்பினராக ஆனபோது, நானும் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானேன். நான் சிலுவம்பாளையத்தில் கிளைக் கழகச் செயலாளராக கட்சிப் பணியைத் தொடங்கி, ஒன்றியம், மாவட்டம், மாநிலப் பொறுப்பு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், தலைமைக் கழக நிர்வாகி, பிறகுதான் முதலமைச்சராக வந்துள்ளேன்.

ஸ்டாலின் அவ்வாறா வந்தார்? அவருடைய அப்பா திமுக கட்சித் தலைவர், முதலமைச்சர், அதனால் எளிதாக சீட் பெற்று, அப்பாவின் செல்வாக்கால் ஜெயித்து வந்தார். ஸ்டாலினுக்கு உழைப்பு பற்றித் தெரியாது. அவர் வந்த வழி வேறு, நாங்கள் வந்த வழி வேறு. நாங்கள் உழைப்பை மூலதனமாகக் கொண்டு உயர்ந்துள்ளோம்.

அவர் குறுக்கு வழியை மூலதனமாகக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார். ஆகவே, சிறந்தது எது என்று எண்ணி, நல்லாட்சி தொடர வாக்களிப்பீர் இரட்டை இலைச் சின்னத்திற்கு.

27.1.2021 அன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, மெரினா கடற்கரை அருகில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகில், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு பிரம்மாண்டமான நினைவிடம் கட்டியுள்ளோம்.

அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அனைவரும் பெருந்திரளாக வந்து கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.திமுக மற்றும் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி ஏறத்தாழ 300 நபர்கள் கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.