தற்போதைய செய்திகள்

ஊரடங்கு அமலில் இருப்பதால் 6 ஆயிரம் மெகாவாட் மின்தேவை குறைந்துள்ளது – அமைச்சர் பி.தங்கமணி தகவல்

நாமக்கல்

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆறாயிரம் மெகாவாட் அளவிற்கு மின்தேவை குறைந்துள்ளது என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு துறைகள் சார்பில் கொரோனா நிவாரண உதவிகள் அளிக்கபட்டு வருகின்றன. இதன்படி, திருச்செங்கோடு அடுத்துள்ள இளநகர் ஊராட்சியில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில், தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு, கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் மற்றும் உணவுத் தொகுப்புகளை, கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச்செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.

மாவட்டத்தில் உள்ள தவழும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான கொரோனா தடுப்பு உதவி உபகரணங்களான முகக்கவசங்கள், கையுறைகள், கால் முட்டி உறைகள், கிருமி நாசினிகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை அமைச்சர்கள் அளித்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் இதுபோன்ற 250 தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கு இப்பொருள்கள் அளிக்கப்படும். மேலும், எலச்சிபாளையம், பெரியமணலி, வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் தொகுப்புகள், கிருமிநாசினிகள், முட்டைகள் ஆகியவற்றையும், பொதுமக்களுக்கு உணவுத் தொகுப்புகளையும் வழங்கினர்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தடை உத்தரவு காலத்தில் அவசியத் தேவைக்காக வெளியே வருவோர் முகக்கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மாஸ்க் அணியாமல் வெளியே வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் அவசியமின்றி இரண்டு பேர் வந்தால் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டு கொரோனா தடைக்காலம் காலம் முடிந்த பிறகுதான் திரும்ப வழங்கப்படும். பொதுமக்கள் முழுஒத்துழைப்பு கொடுத்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் தகவல் தெரிவித்தால் உதவிகள் செய்து தரப்படும்.

தமிழகத்தில் கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆறாயிரம் மெகாவாட் அளவிற்கு மின்தேவை குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக இயற்கை சீற்றம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சில மணி நேரங்களில் 90 சதவீதம் அளவிற்கு பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு மின்வினியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் வழங்கப்பட்டு விட்டது.

வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் பழுதடைந்தவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் ஒரு துணை மின் நிலையத்தில் மின்மாற்றிக்குள் சிறிய பிராணி (பூனை) நுழைந்து விட்டதால் இரவு முழுவதும் மாற்று ஏற்பாடு செய்து மின் வினியோகம் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள், இளைஞர்கள் பட்டம் பறக்க விடுதல் மின்சார வயர்களிலும் அவை சிக்கிக்கொள்ளும். எனவே அது தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு ேமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, திருச்செங்கோடு தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.ஜான்சி, அரசு உதவிபெறும் சிவபாக்கியம் மனவளர்ச்சி குன்றிய பள்ளி தாளாளர் கே.காசிராஜன், இணைச் செயலர் ஆர். விஜயகுமார், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.