தற்போதைய செய்திகள்

ஊர் ஊராக சென்று ஸ்டாலின் நாடகமாடுகிறார் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை

ஊர் ஊராக சென்று ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் 119-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சாத்தமங்கலத்தில் உள்ள மணிமண்டபத்தில் தேவநேய பாவாணரின் திருஉருவச் சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஸ்டாலின் மேடைக்காக மட்டுமே பேசி வருகிறார். அது வழக்கமான ஒன்று. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மட்டுமே வரலாற்றுச் சாதனைகளை செய்து வருகிறார். தேர்தல் அறிக்கையில் மட்டுமே அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதாக சொல்வார்கள். ஆனால் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்தையும் செய்து வருகிறார் என்பதை நாட்டு மக்கள் நன்கு தெரியும்

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் பயிர்க் கடனை முதலமைச்சர் தள்ளுபடி செய்துள்ளார். இதற்கு திருமாவளவன் வரவேற்பு தந்துள்ளார். அதேசமயம் தாட்கோ கடனுக்கு சில வழிமுறைகள் இருக்கிறது. அந்த வழிமுறைகளை பின்பற்றி தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுப்பார்

வழக்குகளை கண்டு நாங்கள் அஞ்சுபவர்கள் இல்லை. கனிமொழி உட்பட பல திமுகவினர் ஊழலுக்காக சிறைச்சாலையில் இருந்தவர்கள். மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த போதிலும், மத்தியில் அங்கம் வகித்த போதும் மக்களுக்கு தி.மு.க.வினர் என்ன செய்துள்ளார்கள் என்பதை ஸ்டாலின் சொல்ல முடியுமா? இலவு காத்த கிளி போல ஸ்டாலின் இருக்கிறார். புகார் சொல்ல வேண்டுமென்றால் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சொல்ல வேண்டும். ஆனால் இவர் ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார்.

மக்கள் யாரும் ஸ்டாலினிடம் மனுக்கள் கொடுக்கவில்லை. ஏனென்றால் மக்கள் நிறைவாக உள்ளனர். திமுகவினர் செட்டப் செய்து மனுக்களை எழுதி நாடகமாடி வருகிறார்கள். மதுரை சிம்மக்கல் பகுதியில் கலைஞர் சிலை வைப்பதற்கு அனுமதி அளித்து விட்டோம். திமுகவினரை போல குறுகிய எண்ணம் படைத்தவர்கள் நாங்கள் அல்ல.

கனிமொழி மதுரைக்கு வருகிறார். முதலில் திமுக சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்ல வேண்டும். அப்போது தான் மக்களுக்கு எந்தப் பணியையும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யவில்லை என்பது தெரியவரும். அதுமட்டுமல்லாது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர்கள் தொகுதி மக்களுக்காக என்ன செய்தார்கள் என்றும் கனிமொழி கேட்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தாரே அதைப்பற்றி கனிமொழியால் கேட்க முடியுமா?

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.