தமிழகம்

ஊழல் என்னும் ஐ.எஸ்.ஐ. முத்திரை தி.மு.க. மீது குத்தப்பட்டு விட்டது

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கோயம்புத்தூர் – ராஜவீதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது:-

இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இங்கு சாதி சண்டை கிடையாது, மதச்சண்டை கிடையாது, அனைத்து சமுதாயத்தினரும் அமைதியாக வாழ்கின்றனர். சட்டத்தின் ஆட்சி தமிழகத்திலே நடைபெற்று கொண்டிருக்கிறது. அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதனால் தான் தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு என்று தொழில் நிறுவனங்கள் தேர்ந்தெடுத்து இங்கே புதிய தொழில்கள் துவங்க விருப்பம் தெரிவித்து தொழில்கள் துவங்கப்பட்டு வருகிறது.

ஸ்டாலின் அவர்களே உங்கள் ஆட்சியை போல இங்கே கட்டப்பஞ்சாயத்து கிடையாது. நில அபகரிப்பு கிடையாது. வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலைகள் நடத்துகின்ற தொழில் அதிபர்கள் நிம்மதியாக தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். திமுக ஆட்சி வந்தால் மீண்டும் நில அபகரிப்பு ஏற்படும். கொலை, கொள்ளை, திருட்டு ஏற்படும்.

சுதந்திரமாக மக்கள் நடமாட முடியாது. அப்படிப்பட்ட ஒரு ஆட்சி தேவையா. திமுக ஆட்சி வந்து விட்டால் மீண்டும் ரசீது புத்தகத்தை தூக்கிக் கொண்டு கடை கடையாக போவார்கள், தொழில் நிறுவனங்களுக்கு போவார்கள், மிரட்டுவார்கள், அந்த நிலை எல்லாம் வரக்கூடாது, இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏமாந்து விடாதீர்கள். திமுக ஒரு அராஜக கட்சி.

கழக ஆட்சியில் ஊழல் நடக்கிறது என்று சொல்கிறார் ஸ்டாலின். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். எனவே நீங்கள் எங்களை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. ஊழல் என்னும் ஐஎஸ்ஐ முத்திரை உங்கள் மீது குத்தப்பட்டு விட்டது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.