எடப்பாடியாருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க ஏற்பாடு-திருச்சி மாவட்ட கழகம் தீர்மானம்

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிற 28-ந்தேதி வருகை தரும் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியாருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என்று திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சிக்கு வருகை தரும் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள எல்.கே.எஸ்.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன் தலைமை வகித்தார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் பிரின்ஸ் எம்.தங்கவேல் வரவேற்புரை ஆற்றினார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார், திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளரும், மாவட்ட ஆவின் சேர்மனுமான பொறியாளர் சி.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான டி.ரத்தினவேல் ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
இக்கூட்டத்தின் போது திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியாருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது.
திருச்சி மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து இதயதெய்வம் புரட்சித்தலைவின் பொற்கால ஆட்சியை மீண்டும் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் தலைமையில் அமைத்திட பாடுபடுவோம் என சபதம் ஏற்போம்.
திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட போது, துரித பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டதுடன், சுமார் ரூ.400 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து புதிய அணையை கட்டிகொடுத்த அன்றைய தமிழக முதல்வர், வாழும் கரிகால் சோழன் எடப்பாடியாருக்கு இக்கூட்டம் நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
தனது சுயநலத்திற்காக எதிரிகளுடனும், துரோகிகளுடனும் கைகோர்த்து, கூட்டு வைத்துக்கொண்டு, கழகத்தை அழிக்க துடிக்கும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தினை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமலும், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டுகொள்ளாமலும் மெத்தன போக்குடன் மக்களை வாட்டி வதைக்கும் விடியா தி.மு.க. அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.