ராமநாதபுரம்

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் – எம்.ஏ.முனியசாமி சூளுரை

ராமநாதபுரம்

கேட்காமலேயே திட்டங்களை அள்ளி அள்ளி தரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்று ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி சூளுரைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் பரமக்குடியில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர் மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள் முதுகுளத்தூர் ஆர்.தர்மர், கமுதி எஸ்.பி காளிமுத்து, பரமக்குடி முத்தையா, நயினார்கோயில் குப்புசாமி, ராமநாதபுரம் அசோக்குமார், ஆர்.எஸ்.மங்கலம் நந்திவர்மன், நகர செயலாளர்கள் ராமேஸ்வரம் அர்ஜுனன், பரமக்குடி கணேசன், வழக்கறிஞர் கருணாகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பால்பாண்டி மற்றும் உதுமான் அலி, திலகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் கழகத்திற்கு மாபெரும் வெற்றியை பெற்று தரும் வண்ணம் இன்று முதல் நீங்கள் அனைவரும் களப்பணி ஆற்ற வேண்டும்.கடைக்கோடியில் இருக்கும் இந்த ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரியை நாம் கேட்காமலே முதலமைச்சர் தந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்தி அதில் ரூ.1400 கோடி மதிப்பில் காவேரி குண்டாறு திட்டத்தை அறிவித்தது மட்டுமல்லாது பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற பணிகளை தனது திருக்கரங்களால் திறந்து வைத்தும் ஏழை எளிய மக்களுக்கு அரசின் சார்பில் நலத்திட்டங்களை வழங்கினார்.

முதலமைச்சரின் உன்னத திட்டமான குடிமராமத்து திட்டம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நீர் நிலைகளில் நீர் ஆதாரம் பெருகியுள்ளது.மேலும் திட்டங்களை அள்ளி, அள்ளி தந்து முதன்மை மாவட்டமாக ராமநாதபுரத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருக்கிறார். வருகின்ற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அதேபோல் அடுத்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் வாக்காளர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகிய முகாம் நடைபெறுகிறது. இதற்காக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11,38,388 வாக்காளர்கள் உள்ளதாக வெளியிடப்பட்டது. தற்போது வாக்காளர் பட்டியல் முகாமில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பூத் களிலும் புதிய 50 வாக்காளர்களை சேர்த்திட வேண்டும். அப்படி சேர்க்கும் பொழுது அந்த புதிய வாக்காளர்கள் நாம் கழகத்திற்கு எளிதில் வாக்களிப்பார்கள்.

அது மட்டுமல்லாது ஒவ்வொரு ஒன்றியம் தோறும் வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்குவார்கள். ஆகவே வருகின்ற 2021 தேர்தல் காலங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் கரங்களில் சமர்ப்பிப்போம். மேலும் கேட்காமலேயே அள்ளி அள்ளி தரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக அரும்பாடு படவேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.