தற்போதைய செய்திகள்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி மலர்ந்திட நம் உழைப்பை காணிக்கையாக்குவோம்-முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேச்சு

தஞ்சாவூர்

எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி மலர்ந்திட கழக தொண்டர்களாகிய நாம் நாள்தோறும் நம் உழைப்பை காணிக்கையாக்குவோம் என்று முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான வைகைச்செல்வன் பேசினார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை – பேராவூரணி தொகுதி கழகம் சார்பாக, பட்டுக்கோட்டை அழகிரி சிலை அருகில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சி.வி.சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு வரவேற்புரையாற்றினார்.

இப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அறிவாலும், ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை. அறிவும் ஆற்றலும் சேர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம். நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்திலே புதுவிதமான ஆற்றல் வெள்ளம் பொங்கிப் பெருகும். இளைஞர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் தேவை. இளைஞர்கள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

கண்ணீர் துளிகள். எங்கிருந்தாலும் வாழ்க. வசவாளர்கள் வாழ்க. ஒன்றேகுலம் ஒருவனே தேவன். இப்படை தோற்கின் எப்படை வெல்லும். இவைகள் ஏதோ சில பொருள்களை தரும் சாதாரண சொற்றொடர்கள் அல்ல. ஒரு சமுதாயத்தை விழிக்கச்செய்து, மறுமலர்ச்சி பெற செய்து, புது உணர்வுகளை தாண்டி, புதிய சமுதாயமாக ஆக்கிய ஆற்றல்மிக்க வரிகள்,

இவைகள் எல்லாம் அண்ணா உதிர்த்த முத்துக்கள், பின்னாளில் தமிழகத்தின் சொத்துக்களாயின. அரசியல் என்பது மற்றவர்களின் வாழ்க்கையைப் பணயம் வைத்து ஆடும் சூதாட்டமல்ல. ஆழ்ந்த அன்பும், இணையற்ற பாசமும் நிறைந்த சகோதர உணர்வும், மனிதாபிமானமும் கலந்த ஒரு வாழ்க்கை முறை என்பதை உலகுக்கு உணர்த்திய ஒரு மாபெரும் சிந்தனையாளர் அண்ணா.

தமிழநாட்டின் ஆறாவது முதலமைச்சரான அண்ணா, குறுகிய காலமே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்தாலும், தமிழ்நாட்டின் அரசியல் போக்கையே புரட்டிப் போட்டவர். அரசியல் மேடைகளைத் தமிழ் வளர்க்கும் அரங்கமாக மாற்றிக் காட்டினார். தமிழ் உள்ளத்தோடும், உணர்வோடும் ஆட்சிக்கு வந்ததால் தம் ஆட்சிக்காலத்தில் என்றுமில்லாத அளவுக்குத் தமிழை முன்னிலைப்படுத்தியே ஆட்சியை நடத்தினார்.

உலக வரலாற்றிலேயே, பொது வாழ்க்கைக்கு தன்னை ஒப்படைத்துக் கொண்ட ஒரு தலைவனுக்கு, அறிஞர் அண்ணாவிற்கு ஏற்பட்டது போன்ற துயரம் மிகுந்த அனுபவம் ஏற்பட்டிருக்காது. இதயத்தைத் தூளாக்கும் சொல்கள், இழிமொழிகள், வசைகள், ரத்தத்தைச் சூடேற்றும் நாராச – நரகல் நடைப் பேச்சுக்கள்,

அழித்து ஒழிப்பதற்கான இடைவிடாத தாக்குதல்கள், தன்னை ஆளாக்கிய தலைவனிடமிருந்து, தான் ஆளாக்கிய அன்பு தம்பிகளிடம் இருந்து எப்போதும் எதிர்க்கும் எதிரிகளிடமிருந்து, என்று அனைத்து தரப்பினருடைய தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று பொறுமை காத்தார். மறப்போம், மன்னிப்போம் என்றார்.

ஒருமுறை தென்மாவட்டத்திற்கு பேரறிஞர் அண்ணா பேசச்சென்ற போது, அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அண்ணா பேசும் மேடைக்கு எதிரே ஒரு பெண் கையில் விளக்குமாறு வைத்திருப்பதாக உள்ள படத்தை மாட்டியிருந்தனர். அதைக்கண்ட தொண்டர்கள் ஆதங்கப்பட்டனர்.

அவர்களை அமைதிப்படுத்திய அண்ணா இப்படி சொன்னார். அவர்கள் ஒன்றும் தவறாக வைக்கவில்லை. அவர்கள் செய்யும் ஊழல்களை என்னை நன்கு விளக்குமாறு பணித்திருக்கிறார்கள் என்றார். இதைக்கேட்ட எதிர் முகாமினர் வெட்கித் தலைகுனிந்தனர்.

இழைத்த கொடுமைகளை மறந்தார், மன்னித்தார். வீழ்த்த முயன்றவர்களும், வெறி பிடித்து தாக்குதல் தொடுத்தவர்களும் வெட்கித் தலைகுனிந்தனர். தாக்குதலையும், தழுவுதலையும் ஒன்றாகக் கருதினார்.

எதிர் முகாம்களில் இருக்கும் பண்பாளர்கள், தியாக உள்ளம் படைத்தவர்கள், திறமையாளர்கள், நல்லவர்கள், நாட்டுக்கு உழைத்த வித்தகர், எங்கிருந்தாலும், எந்த முகாமில் இருந்தாலும் பாராட்டுகிற பண்பை வளர்த்தார்.

பகை, பழி, வெறுப்பு என்ற அநாகரிக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த, திராவிடத்தின் தொடக்கப் புள்ளியான அண்ணாவின் கனிவும், அவர் பிறரை கனியச்செய்யும் முறையும் நாம் கற்க வேண்டிய பாடங்களாகும். பேரறிஞர் அண்ணாவின் வைர வரிகளை நம் நெஞ்சிலே தாங்கி, இடைக்கால பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி மலர்ந்திட கழக தொண்டர்களாகிய நாம் நாள்தோறும் நம் உழைப்பை காணிக்கையாக்குவோம்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பு செயலாளருமான வைகைச்செல்வன் பேசினார்.