தமிழகம் தற்போதைய செய்திகள்

எட்டயபுரம் உமறுப்புலவர் மணிமண்டபத்தில் ரூ.9 லட்சத்தில் குடிநீர் வழங்கும் இயந்திரம் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

எட்டயபுரம் உமறுப்புலவர் மணிமண்டபத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் குடிநீர் வழங்கும் இயத்திரத்தை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம், அமுதகவி உமறுப்புலவர் மணிமண்டபத்தில், தமிழக அரசின் சார்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் அமுதகவி உமறுப்புலவர் பிறந்த நாள் விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில், நடைபெற்றது.

இவ்விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, அமுதகவி உமறுப்புலவர் அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் மலர்போர்வை போர்த்தி, மலர்தூவி, மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு சுற்றுலா துறையின் வளர்ச்சி திட்ட நிதியில் ரூ.9 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:- 

சீறாப்புராணம் இயற்றிய அமுதகவி என்று போற்றப்படும் உமறுப்புலவர் அவருடைய நினைவை போற்றும் வகையிலே அவருக்கு மணிமண்டபத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய காலத்திலே சிறப்பு செய்யப்பட்டது. அதைப்போல அமுதகவி உமறுப்புலவருடைய பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்ட நேரத்திலே எங்களுடைய துறையின் மூலமாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்றவுடன் உடனடியாக அமுதகவி உமறுப்புலவருக்கு அரசு விழா என்ற அந்தஸ்தை கொடுத்தது அம்மாவின் அரசு என்பதை இந்த நேரத்திலே மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்.

அந்த வகையில் இன்றைக்கு 378வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்த விடுதலை போராட்ட வீரர்களின் தலை சிறந்த ஒருவராக இருந்த ஐதர் அலி திப்பு சுல்தான் கோட்டை கட்டி அவர்கள் அரசாட்சி செய்த அந்த பகுதியிலே விடுதலை போராட்டத்துக்கு வித்திட்ட வீரப்பரம்பரையைச் சேர்ந்தவர்.

அவரையும் சிறப்பு செய்ய வேண்டும் என்று திண்டுக்கல்லிலே ஐதர் அலி திப்பு சுல்தான் அவர்களுக்கு மணிமண்டபத்தை கட்டி முடித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதனை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திண்டுக்கல்லில் நடைபெற்ற பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது நேரடியாக வந்து அதை திறந்து வைத்து அவருடைய புகழுக்கு புகழஞ்சலி சேர்க்கபட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன். தமிழக அரசு சிறுபான்மை பிரிவு மக்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் அதை செய்கின்ற நிறைவேற்றுகின்ற அரசாக அம்மாவின் அரசு இருக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் போ.சின்னப்பன், கோவில்பட்டி கோட்டாட்சியர் திருமதி.விஜயா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், எட்டயபுரம் வட்டாட்சியர் அய்யப்பன், சுற்றுலா அலுவலர் சீனிவாசன், எட்டயபுரம் பேருராட்சி செயல் அலுவலர் கணேசன், கயத்தாறு பேருராட்சி செயல் அலுவலர் ஜோதிபாசு, உமறுப்புலவர் சங்க தலைவர் காஜா மைதீன், தூத்துக்குடி வர்த்தக சபை பிரமுகர் ரகுமான்பாட்சா, உமறுப்புலவர் வாரிசு சங்கத்தை சேர்ந்த சென்னை புகாரி, மாவட்ட மருத்துவஅணி இணைச்செயலாளர் டாக்டர் சந்திரன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய போடுசாமி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு.கேசவமூர்த்தி, எட்டயபுரம் நகர செயலாளர் ஆழ்வார் உதயகுமார், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் மாரிமுத்து பாண்டியன், வார்டு செயலாளர் எட்டு முருகன் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர்.