கோவை

எத்தனை சோதனை வந்தாலும் தவிடு பொடியாக்குவோம் – பொள்ளாச்சி வி.ஜெயராமன் உறுதி

கோவை,

எத்தனை சோதனை வந்தாலும் அவற்றை தவிடு பொடியாக்குவோம் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறினார்.

கோவை இதயதெய்வம் மாளிகையில் கழக அமைப்பு செயலாளரும், புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தலைமையில் கோவை புறநகர் தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கழக தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தமிழகத்திற்கு சென்னை மாநகரம் தலைநகராக இருந்தாலும் கழகத்திற்கு தலைநகரம் கோவை என்பதை நிரூபிக்கும் வகையில் 9-ந்தேதி (இன்று) நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரண்டு வாருங்கள். நம்மை மிரட்ட நினைக்கும் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஒரு சரியான படிப்பினையை உணர்த்தும் வகையிலும்,

தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகவும் இந்த ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும். தி.மு.க. எத்தனை தீங்கு செய்தாலும் அதனை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என வெற்றி பாதையில் நடைபோட்டு அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் கொங்கு மண்டலத்தில் உள்ள ஒருவரை உற்றுப் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர் தான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இவரை அடக்கினால் கழகத்தை அடக்கி விடலாம் என்று தி.மு.க. நினைக்கிறது.

ஒரு கட்சியை தலைவர்கள் தொடங்குவார்கள். ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில் தலைவர்கள் தொடங்காமல் மக்களால் தொடங்கப்பட்ட ஒரு கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.

அண்ட புளுகு, ஆகாச புளுகு கருணாநிதியை விட பயங்கரமாக புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் சொன்னதெல்லாம் செய். வாக்குறுதிகளை 6 மாத காலம் ஆகியும் நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கழக சிங்கங்கள் சிறு நரிகளை எதிர்த்து போராடுகிறது. கோவை குலுங்கியது என சொல்லும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும். ஒரு லட்சம் பேர் திரண்டார்கள் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கற்றுக் கொடுத்த வீரம் எங்கள் உடம்பில் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலும் இருக்கிறது. எங்களை இளிச்சவாயர்கள் என்று நினைக்காதீர்களா? எந்த ஊரில் இருந்து எலி வந்தாலும் சரி, பெருச்சாலி வந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம். எங்களுக்கு எஸ்.பி.வேலுமணி இருக்கிறார். அவர் ஒருவரே போதும்.

கழகத்திற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாகவும், வளர்ந்ததாகவும் வரலாறு இல்லை. கழகம் எதற்கும் அஞ்சாது. அச்சப் படாமல் தலை நிமிர்ந்து நிற்போம். எதிரிகளை வீழ்த்தியே தீருவோம்.

மீண்டும் அரியணையில் கழகம் அமர 9-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் அச்சாரமாக அமையட்டும். வெல்லட்டும் நமது போராட்டம். இந்த களம் நமக்கு தேவை. இதைத்தான் நாம் எதிர்நோக்கி இருக்கிறோம். உங்களுக்கு எந்த சோதனை வந்தாலும் அவற்றை தவிடுபொடியாக்குவோம். துவம்சம் செய்வோம்.

இவ்வாறு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசினார்.