தற்போதைய செய்திகள்

எத்தனை பேரிடர் வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயார் -பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டம்

சென்னை.பிப்,6-

எத்தனை பேரிடர் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு தொடர்பாக, நாகப்பட்டினம் உறுப்பினர் தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.

இதற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்து பேசியதாவது:-

முதல் முறையாக பேரிடர் காலத்தில் பேரிடர் கண்காணிப்பு அறையை நேரடியாக சென்று பார்வையிட்டவர் ஒரே முதல்வர் நமது முதல்வர்தான்.எந்த ஒரு முதல்வரும் இதுவரை செய்யாத வகையில் அதனை செய்தார். நிவர், புரெவி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மழை ராசி பெற்ற முதல்வராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இருக்கிறார். அதற்கு சான்று மார்கழி மாதத்தில் கூட தமிழகத்தில் மழை பெய்துள்ளது.

பருவமழையால் பாதிப்படைந்த விவசாயிகளின் வேளாண் பொருட்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. உரிய வகையில் இழப்பீடு சென்று சேருகிறதா என்று முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். மத்திய குழுவினரும் தமிழகத்துக்கு வந்து மழை வெள்ள பாதிப்புகளை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

1114.9 கோடி ரூபாய் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிகள் மூலமாக செலுத்தப்பட்டு உள்ளது. சட்டமன்றத்தில் தண்ணீரில் பயிர்கள் கண்ணீரில் விவசாயிகள் என்ற பதாகையுடன் வந்த உறுப்பினருக்கு, பயிர்கள் தண்ணீரில் இருக்கின்றன,

ஆனால் விவசாயிகள் கண்ணீரில் இல்லை முதல்வரின் கருணை மழையில் இருக்கிறார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன். பெரும் பேரிடர் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் முதல்வரை தமிழகம் பெற்றுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலளித்தார்.