தற்போதைய செய்திகள்

என்.எல்.சி. அதிகாரிகளை தடுத்து கிராம மக்கள் போராட்டம் – நெய்வேலி அருகே பரபரப்பு

கடலூர்

இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்கு நிலத்தை அளவீடு செய்ய வந்த என்.எல்.சி. அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் நெய்வேலி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கரிவெட்டி கிராமத்திற்கு என்.எல்.சி. அதிகாரிகள் நேற்று இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் மனை வீடு அளவீடு செய்வதற்காக வருகை தந்தனர். இதையடுத்து முன்னதாக அப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதனை அறிந்த கரிவெட்டி கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கிராமத்தின் முகப்பில் திரண்டு என்.எல்.சி. அதிகாரிகளை கிராமத்தின் உள்ளே விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை,

இன்றைய கால சூழலில் நிலம், மனை, வீடுகள் மற்றும் மரங்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் திரும்பி செல்லுங்கள் என கூறி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அறிந்த புவனகிரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழித்தேவன் நேரில் வருகை தந்து கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் என்.எல்.சி. அதிகாரிகளிடம் பேசும்போது, கிராம மக்களின் நியாயமான கோரிக்கை குறித்து சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம் துறை அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் தெரியப்படுத்தியிருக்கிறேன்.

இதற்கு அரசு பல்வேறு தரப்பினரையும் இணைத்து ஒருகமிட்டி உருவாக்கி என்.எல்.சி. பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் என தெரிவித்தது. அதன்படி அரசு சொன்னதுபோல உடனடியாக கமிட்டி அமைத்து என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த மக்களின் நியாயமான கோரிக்கைகளை

நிறைவேற்றி விட்டு பிறகு நிலம், மனையை அளவீடு செய்ய வாருங்கள் என கூறினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர் பேசி அதிகாரிகளை அங்கிருந்து திரும்பி போக செய்தார்.

இதுகுறித்து ஆ.அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

என்.எல்.சி. நிர்வாகம் இது வரை நிலம், மனை, வீடு கொடுத்தவர்களுக்கு சொன்னது போல் செய்தது இல்லை. மக்களை வஞ்சிக்காமல் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை எட்ட வேண்டும். என்.எல்.சி. நிர்வாகம் தனது நிலையிலிருந்து இறங்கி வர வேண்டும். இல்லை என்றால் மக்களின் நியாயமான கோரிக்கைக்காக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.