தற்போதைய செய்திகள்

எலந்தைக்குட்டை கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம்-அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், எலந்தைக்குட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 2021-ம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் செய்யும் பணியை கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி துவக்கி வைத்தார்.

இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த கிரேடு ஏ ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.1888-ம், ஊக்கத்தொகையாக ரூ.70-ம் சேர்த்து ரூ.1958-ம் வழங்கப்படுகிறது.

பொது, சாதாரண ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.1868-ம், ஊக்கத்தொகையாக ரூ.50-ம் சேர்த்து ரூ.1918-ம் வழங்கப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் தங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் நகலை கிராம நிர்வாக அலுவலரின் சான்று பெற்று வருவதுடன், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலுடன் வரவேண்டும்.


பின்னர், கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் 6 வகுப்பறைகள், மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பிடங்கள் கட்டும் பணியினை அமைச்சர் பி.தங்கமணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.