சிறப்பு செய்திகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: முதல்வர்- துணை முதல்வர் இரங்கல்

சென்னை

‘பாடும் நிலா’ என்று இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை ஆரம்பித்த இரண்டு வாரங்களில் அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து உலகம் முழுக்க அவருக்காக கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. அதன் விளைவாக ஆச்சரியப்படத்தக்க வகையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் எதிரபாராதவிதமாக நேற்றுமுன்தினம் அவரது உடல்நிலை மீண்டும் பின்னடைவை சந்தித்து மோசமானதை தொடர்ந்து நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 75. ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தியாவின் அநேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை அவரை தேடிவந்த 6 தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அதோடு ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனையும் இவரால் படைக்கப்பட்டது தான். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் மற்றும் பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு திரைப்படத்துறைக்கும், கலை உலகிற்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் இரங்கல்

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்களை தேனினும் இனிமையான தனது குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், ‘எஸ்.பி.பி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இந்திய இசை உலகத்திற்கு 20-ம் நூற்றாண்டில், இறைவன் அளித்த இனிய கொடையாக வந்து உதித்தவர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆயிரம் நிலவே வா என்ற புகழ் வாய்ந்த பாடலை அவர் தான் பாட வேண்டும் என்று காத்து இருந்து வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் இதயத்தில் இடம்பெற்ற இன்னிசை நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அன்னாரின் குரலில் நேற்றும், இன்றும், நாளையும் ஒலிக்கும் `தங்கத் தாரகையே வருக வருக, தமிழ் மண்ணின் தேவதையே வருக வருக’ என்ற புரட்சித்தலைவி அம்மாவின் புகழ் பாடும் பாடல், கழகத்தின் வரலாற்றில் என்றும் இணைந்திருக்கும்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடவுள் மீது பக்தி கொண்டு கந்தசஷ்டி கவசம் மற்றும் ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில், போன்ற பல பாடல்களை உள்ளம் உருக பாடி, பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.  எஸ்.பி. பாலசுப்பிரமணியம் குரல் இனிமைக்கு நிகர் அவரே. இவர் மிக அதிகமான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்து, புகழின் உச்சிக்கே சென்றவர். இவர் பாடகர், நடிகர், பின்னணி குரல், இசையமைப்பாளர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர்.

கலைமாமணி விருது, தேசிய விருது, பல மாநில விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சொந்தக்காரர். மத்திய அரசு இவருக்கு பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்தது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு தமிழ் திரைப்படத்துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டே அன்னாரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.

தனது ஈடு இணையற்ற குரல் வல்லமையால் தமிழ் திரைப்பட உலகுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு திரைப்படத்துறைக்கும், கலை உலகிற்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரை உலக நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் இரங்கல்

திரையிசை உலகில் ஒரு சகாப்தம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேமதுரக் குரல் கொண்டு இவ்வையகத்தை மகிழ்வித்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நம்மை விட்டு மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயர் அடைந்தேன். வைரஸ் கொடுநோய்த் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அபாய கட்டங்களைத் தாண்டி முன்னேற்றம் பெற்று வருகிறார் என்ற தகவலை கேட்டு, அவர் நலம் பெற்று மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் இருந்த நேரத்தில் அவர் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பரிதவிக்கின்றனர்.

எஸ்.பி பாலசுப்பிரமணியம் திரையிசை உலகில் ஒரு சகாப்தமாக விளங்கினார். தனது இன்னிசைத் தேன் குரலால் லட்சக்கணக்கான இசை ரசிகர்களை மட்டுமல்ல அவரது பாடலைக் கேட்கும் அனைவரையும் ஈர்த்து தன் வசமாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார். பாடலுக்கு என்றே பிறந்தவர் எஸ்பிபி என்று சொல்லுமளவிற்கு, 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, அதிக எண்ணிக்கையிலான பாடலை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சாதனை படைத்தவர் ஆவார்.

தமிழ் மொழியில் மட்டுமன்றி மொத்தம் நான்கு மொழிகளில் பாடல்கள் பாடி தேசிய விருது பெற்ற ஒரே பாடகர் என்ற பெருமைக்கு உரியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் . ஒரே நாளில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி ஒளிப்பதிவு செய்து சாதனை சின்னமாக அவர் திகழ்ந்தார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் உட்பட பல்வேறு புகழ்மிகு விருதுகளை பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடல் பாடுவது மட்டுமன்றி நடிப்பிலும் தனி முத்திரை பதித்தவர். 72க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

எஸ்.பி பாலசுப்பிரமணியம் 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையிசையுலகில் கோலோச்சியவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது அன்பை பெற்று, அவர்கள் நடித்த படங்களில் சிறப்பான பாடல்களை பாடியவர். தனது அற்புத குரல் வளத்தால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் ஈர்த்து இந்திய அளவில் எண்ணிலடங்கா இசை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

அன்னாரது மறைவு நமக்கெல்லாம் சொல்லொணாத் துயரத்தை அளித்திருக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்தாலும், கானக்குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது பெருமையை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். சீரும் சிறப்பும் பேரும் புகழும் கொண்டு திரையிசை உலகில் தனக்கென ஒரு தனி இடம் கொண்டிருந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இத்துயரைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமை பெற இறைவனை வேண்டுகிறேன். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை இறைஞ்சி பிரார்த்திக்கின்றேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகெங்கும் உள்ள இசை ரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.