தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவீர்

கழக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேண்டுகோள்

திருப்பத்தூர், ஜூலை 16-

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொன்விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் மாவட்ட கழக அவைத்தலைவர் புஷ்பநாதன் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தில்குமார், மாவட்ட கழக நிர்வாகிகள் ஏ.ஆர்.ராஜேந்திரன், எம்.கே.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக செயலாளர் டி.சாம்ராஜ் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க.வினரின் அராஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தி.மு.க.வினர் அரசாங்க நிர்வாகத்தில் தலையிட்டு
வளர்ச்சி பணிகளை தடுத்து வருகின்றனர். பொய்யை முதலீடு செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்று
ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதி மக்களிடம் அளித்து ஆட்சியை பிடித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் ஒரு வாக்குறுதியும் நிறைவேற்ற முடியவில்லை. தி.மு.க.வினர் சிறுபான்மை மக்களிடம் விஷம, பொய்யான தகவல்களை பரப்பி அவர்களை ஏமாற்றுகின்றனர்.

தொண்டர்களை முன்நிறுத்தி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கழகம் என்ற பேரியக்கத்தை 1972-ல் துவக்கினார்.
இந்த ஒன்றியத்தில் கழகத்தின் உண்மையான தொண்டர்கள் கழக வேட்பாளாருக்கு அதிகமான வாக்குகள் அளித்து வெற்றிபெற செய்துள்ளனர். வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். 100 சதவீதம் கடுமையாக உழைத்து கழக வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். பொன் விழாவை முன்னிட்டு அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் கழக கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க கோவிந்தராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் டி.டி.சி.சங்கர், ஆர்.வி.குமார், இளங்கோ, வாசுதேவன், நகர கழக செயலாளர் ஜி.சதாசிவம், ஒன்றிய கழக செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி கழக செயலாளர் மகான், ஒன்றிய கழக பொருளாளர் எல்லப்பன், சகாதேவன், முனிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.