தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு-சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தருமபுரி, ஜூன்

காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தமிழக பகுதியான பிலிகுண்டுலுவுக்கு 7000 கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 16,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றை கடக்க பரிசல் பயணம் மேற்கொள்ளவோ மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்து செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் காவேரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்தால் தண்ணீர் வரத்து மேலும் படிப்படியாக அதிகரிக்கும் என்று மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.