சிறப்பு செய்திகள்

ஒரே விமானம், ஒரே வாகனத்தில் முதல்வர்-துணை முதல்வர் பயணம்

சென்னை

திருநெல்வேலியில் மாவட்டம் கோவிந்தபேரியில் நேற்று நடைபெற்ற முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்க சென்ற முதல்வர், துணை முதல்வர் ஒரே விமானம், ஒரே வாகனத்தில் சென்று பங்கேற்றனர்.

சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நீதியரசர் சஞ்சீப் பானர்ஜியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ஒரே விமானத்தில் வருகை தந்தனர். தூத்துக்குடி விமான நிலையத்தில் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர், இருவரும் ஒரே காரில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக திருநெல்வேலி மாவட்டம் கோவிந்தப்பேரி கிராமத்திற்கு செல்லும் வழியில் கருங்குளம் என்ற இடத்தில் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் திரண்டிருந்து வரவேற்றனர். அப்போது அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருவுருவச் சிலைக்கு இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திறந்த ஜீப்பில் இருவரும் சென்று அங்கு கூடியிருந்த திரளான பொதுமக்களிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

பின்னர் கோவிந்தப்பேரி கிராமத்திற்கு சென்று முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபத்தையும், சிலையையும் திறந்து வைத்தனர். அதன் பின்னர், இருவரும் ஒரே காரில் பயணம் செய்து உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வரும் அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.முருகையா பாண்டியனை இருவரும் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மதுரை வரை ஒரே காரில் பயணம் மேற்கொண்டனர்.