தற்போதைய செய்திகள்

ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பது அ.தி.மு.க.வுக்கு மகிழ்ச்சி

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை

விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியவர் எடப்பாடியார் என்றும், ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பது அ.தி.மு.க.வுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றும் முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ மதுரை மா பரவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ரேவதி மதுரைக்காரர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழர்கள் அதிகளவில் ஒலிம்பிக்கில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக தடகள வீரர்கள் இந்த ஆண்டு அதிக அளவில் கலந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியவர். மாவட்ட அளவில், மாநில அளவில் உலக தரத்திலான விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்தி கொடுத்தவர். விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தவர் எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்கள் என்றால் அது அ.தி.மு.க.வுக்கு மகிழ்ச்சியும், பெருமையும் தரக்கூடியதாக உள்ளது.

மதுரை வீராங்கனை ரேவதி வீரமணிக்கு மறைந்த என்னுடைய மகனின் பெயரால் நடத்தப்பட்டுவரும் ஆர்ஜேதமிழ் மணி டிரஸ்ட் மூலம் உதவிகளை அவருடைய பயிற்சியாளர் மூலம் வழங்கியதோடு அந்தப்பெண் என்னை சந்தித்து பல்வேறு பாராட்டுதல்களை பெற்றுள்ளார். எனவே அவர் வெற்றிபெற்றால் அது எங்களுக்கு பெருமை தரக்கூடியது.இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்