தற்போதைய செய்திகள்

ஓசி ரயில் ஸ்டாலின்: அமைச்சர் விளாசல்

திருவாரூர்

திருவாரூர் கீழ வீதியில் உள்ள நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று காலை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஸ்டாலின் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் அரசியல் கூட்டம் நடத்தி வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அமைச்சர்களுக்கு பெயர் சூட்டி வருகிறார். இதுபோன்ற சின்னத்தனமான செயல்களை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பதவிக்கு தகுந்தாற்போல் அவர் நடந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாங்களும் அவருக்கு பெயர் சூட்ட தயங்க மாட்டோம்.

ஓசி ரயில் ஸ்டாலின் என அவருக்கு பெயர் சூட்டி அழைப்பதில் தயங்க மாட்டோம். ஓசி ரயில் கலைஞரின் மகன் என அழைப்போம். ரயில் பயணம் குறித்து கவிஞர் கண்ணதாசனே கூறியுள்ளார். தேர்தல் வரும்வரை ஸ்டாலின் எதையாவது கூறி கொண்டே இருப்பார். நாட்களை கடத்திக் கொண்டு இருப்பார். தேர்தல் முடிந்தவுடன் வீட்டிற்கு சென்று படுத்துக் கொள்வார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தா, வருவாய் அலுவலர் பொன்னம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.