கிருஷ்ணகிரி

ஓசூரில் ரூ.87.91 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணி – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சமநிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் மற்றும் ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் மழை நீர் சேகரிக்கும் பொருட்டு தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சு.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் வழங்கும் பொருட்டு அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.87.91 கோடி மதிப்பில் 8 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளில் 7 முடிவுற்ற பணிகளையும், ஒரு நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும், 4 பணிகள் முடிவுற்ற சமநிலை நீர்த்தேக்க தொட்டி என மொத்தம் 12 நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இப்பணிகள் மூலம் ஓசூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 20 ஆயிரத்து 333 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது. அவற்றில் இதுவரை 18 ஆயிரத்து 500 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு வழங்கும் பொருட்டு பிரதான குழாய் இணைப்பு 57.048 கி.மீ தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. பகிர்மான குழாய் 135.148 கி.மீட்டர் தூரத்திற்கு பதிக்கப்பட்டு பணிகள் முடிவுற்றது. மீதம் உள்ள பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர், துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் மழைநீரை சேமிக்கும் பொருட்டு பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் தூர வாரும் பணிகள், கரைகள் பலப்படுத்தும் பணிகள், ஏரியை ஆழப்படுத்தும் பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு தூரிதமாக முடிக்க மாநகராட்சி பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். தொடர்ந்து கக்கனூர் சோதனை சாவடி மற்றும் கக்கனூர் பகுதி நேர நியாய விலை கடையில் பொருட்கள் இருப்பு மற்றும் பொது வினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரார்களுக்கு பொருட்கள் வினியோகம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் கே.பாலசுப்பிரமணியன், மாநகராட்சி பொறியாளர் வி.கார்த்திகேயன், உதவி பொறியாளர் ராஜேந்திரன், குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சுந்தர பாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.