தற்போதைய செய்திகள்

ஓட்டுக்காக தி.மு.க. மக்களை குழப்புகிறது – அமைச்சர் க.பாண்டியராஜன் குற்றச்சாட்டு

அம்பத்தூர்

ஓட்டுக்காக தி.மு.க. மக்களை குழப்புகிறது என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

மாணவ மாணவிகளின் வாழ்க்கையை மாற்றி அமைத்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்வு பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த 23 மாணவ மாணவிகளுக்கு பரிசுப் பொருள், புத்தகம், மற்றும் மருத்துவ படிப்புக்கு தேவையான முதன்மை பொருள் ஸ்டெதாஸ்கோப் ஆகியவற்றை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கி பாராட்டினார்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு மருத்துவ படிப்புக்கு மட்டும் உதவி செய்யவில்லை உங்களுடைய கல்வி கட்டணம், தங்கும் விடுதி கட்டணம், உணவு கட்டணம், அனைத்துமே அம்மா வழியில் வரும் முதலமைச்சர் எடப்பாடி அரசு செய்து வருகிறது. நீங்கள் படித்து முடித்து தனியார் மருத்துவமனைகளில் குறைந்த சம்பளத்தில் பணிக்கு செல்வதை குறைக்கும் வகையில் 2000 மினி கிளினிக்குகள் உருவாக் கப்படுகின்றன.

ஆவடியில் 14 மினி கிளினிக்குகள் செயல்பாட்டில் உள்ளன இதன் மூலம் 2 ஆயிரம் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். அது மட்டுமல்லாமல் நீங்கள் எம்.பி.பி.எஸ் முடித்து மேலும் உயர்நிலை படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்வதென்றால் அதற்கும் 1 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது . நீங்கள் கல்லூரிக்கு சென்ற உடன் உங்களுக்குள் எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளும் வரக்கூடாது படிப்பு ஒன்றே குறிக்கோளாக நினைத்து வெற்றி வாகை சூடுங்கள்.

இந்த கொரோனா காலத்தில் அரசின் விதிமுறையை மீறி உதயநிதி ஸ்டாலின் பணம் கொடுத்து அழைத்து வந்த கூட்டத்திற்கு கொரோனாவை பரிசாக கொடுக்கிறார் இதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. மேலும் அவர் கடலில் எந்தவித பாதுகாப்பும் இன்றி அளவுக்கு அதிகமான ஆட்களை கூட்டி செல்வது அவருக்கு ஆபத்தானது .

அவருடைய அப்பா ஸ்டாலின் தேவர் பெருமகனார் விபூதியை கீழே கொட்டுகிறார். உதயநிதி ஆதீனத்திடம் விபூதி வாங்கிக் கொள்கிறார். ஓட்டுக்காக மக்களை குழப்பும் வேலையை திமுக செய்வது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அடிமட்ட தொண்டனும் முதல்வர் பதவிக்கு வரமுடியும் என்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உதாரணம்.

இதே போன்று திமுகவில் வர முடியுமா? மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம்- பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும். காரணம் நீர் மேலாண்மை திட்டம் கூவம் நதி தூர்வாரப்பட்டு இன்று நீர் ஓடிக் கொண்டிருக்கிறது, ஆவடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை 22 குளங்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுகிறது நீர்நிலைகளை ஆக்கிரமித்தது திமுக அதனை மீட்டு அரசு கட்டிடங்களை வழங்கியது கழக அரசு. இதற்கு உதாரணம் ஆவடியில் ரூ.2 கோடி அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் மீட்கப்பட்டு அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

நிகழ்ச்சியில் ஆவடி நகர கழக செயலாளர் ஆர்.சீ.தீனதயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்டெதாஸ்கோப் பரிசுகளை பெற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் காகு அரசிற்கும், அமைச்சர் க.பாண்டியராஜனுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.