தற்போதைய செய்திகள்

ஓட்டுக்காக தி.மு.க.வினர் நாடகம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கு

கோவை

தேர்தல் நேரத்தில் மட்டும் வரும் தி.மு.க.வினர் ஓட்டுக்காக நடிக்கிறார்கள் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி கழக வேட்பாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி செல்வபுரம் பகுதி கழகத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக அவர் கோவை செல்வபுரத்தில் உள்ள சாஸ்தா கோயிலில் சாமிதரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கழக அரசை குறை கூறுவதையே ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார். என்னை பற்றி பேசாவிட்டால் ஸ்டாலினுக்கு தூக்கமே வராது. கோவையில் நடைபெற்ற தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் நூற்றுக்கணக்கான முறை எனது பெயரை உச்சரித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி.க்கள் தொகுதி பக்கம் இதுவரை வரவில்லை. கொரோனா காலத்தில் மக்களை நேரடியாக சந்தித்து அன்றாடம் தேவையான பொருட்களை வீடு வீடாக கொண்டு சென்று தந்தது கழகம் மட்டுமே.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று கள ஆய்வு நடத்தி தேவையான உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். ஆனால் திமுக தலைவரோ அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார். ஸ்டாலினும், திமுகவினரும் மக்களுக்காக எந்த உதவியும் செய்யவில்லை.

தேர்தல் வந்துவிட்டதால் திமுகவினர் தொகுதி பக்கம் வருகிறார்கள். மேலும் அதை செய்வோம் இதை செய்வோம் என பொய் வாக்குறுதி தருவார்கள். ஆனால் நாங்கள் ஓய்வின்றி உங்களுக்காக உழைத்து வருகிறோம். கழக ஆட்சியில் இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்ள ஹஜ் கமிட்டி மானியத்தை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது.

இஸ்லாமிய மக்களுக்காக கபர்ஸ்தான் அமையவும், தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்ட நிர்வாக மானியத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியது என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால் திமுகவினர் சிறுபான்மையினர் பாதுகாவலன் என்று கூறிக்கொண்டு மதிப்பது போல் நடிப்பார்கள்.

வாக்குகளை பெற்ற பிறகு கடைசியில் மக்களை மிதிப்பார்கள். நான் உங்களில் ஒருவன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்க முடியும். ஆகவே வருகிற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

பிரசாரத்தின்போது செலவபுரம் குவ்வத்துல் இஸ்லாம் ஹனபி சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் ஆதரவு அமைச்சருக்கு சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்ந்து செல்வபுரம் பகுதி கழகத்திற்குட்பட்ட எல்.ஐ.சி.காலனி, சாஸ்தா நகர், சிதம்பரம் காலனி, நாராயணசாமி நகர், என்.எஸ்.கே.வீதி, ஹவுசிங் யூனிட் பகுதி, சௌடேஸ்வரி காலனி, சொக்கம்புதூர், செல்வபுரம், தேவேந்திர வீதி, பாண்டியன் நகர், ராமமூர்த்தி காலனி, பேரூர் மெயின்ரோடு, கல்லாமேடு, தில்லைநகர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வழிநெடுக அமைச்சருக்கு பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.