தமிழகம்

கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனை – முதலமைச்சர் பேச்சு

சென்னை

கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனை செய்துவருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது.

பொதுப்பணித் துறையில், குடிமராமத்துத் திட்டம், தடுப்பணைகள் கட்டும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர், குமாரமங்கலம் கிராமங்களுக்கிடையே ரூபாய் 495 கோடி மதிப்பீட்டில் கதவணை அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 40 சதவிகிதப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதேபோல் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது.

நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக, கடலூர் மாவட்டத்தில் ரயில்வே கடவுகளுக்கு குறுக்கே உயர்மட்டப் பாலங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. கடலூர் நகரத்தில் கீழ்ப்பாலம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

வீடுகட்டும் திட்டத்தின் மூலமாக குடிசை மாற்று வாரியத்தின் பங்களிப்புடன் பரங்கிப்பேட்டை, கடலூர் நகராட்சி, திருவதிகை, காடம்புலியூர், பண்ருட்டி, கீழ்க்குப்பம், பாலக்கொல்லை ஆகிய இடங்களில் வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெல்லிக்குப்பம் ஆகிய நகராட்சிகளில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு, சொந்த இடத்தில் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.