கன்னியாகுமரி

கடலோர பகுதி மக்களிடம் கபசுரக்குடிநீரை கொண்டு சேர்க்க வேண்டும் – டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் வேண்டுகோள்

கன்னியாகுமரி

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிடும், கபசுரக்குடிநீரை கடலோர பகுதி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், 12 ஊராட்சிக்குட்ட 8 கடற்கரை கிராமங்கள், 3 பேரூராட்சிகளிலுள்ள வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும், கபசுரக் குடிநீர் வழங்கிட, அதற்கு தேவையான கபசுரக் குடிநீர் பொடி பாக்கெட்டுகள், கேன் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, கேசவன்புத்தன்துறை சமூக நலக் கூடத்தில் கேசவன்புத்தன்துறை பங்குத்தந்தை சி.ஜெகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதனை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் ஏற்பாட்டில், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், 12 ஊராட்சிக்குட்ட கடற்கரை கிராமங்களான கீழமணக்குடி, மேலமணக்குடி, பள்ளம்துறை, அன்னைநகர், கேசவன்புத்தன்துறை, புத்தன்துறை, பொழிக்கரை, பெரியக்காடு ஆகிய 8 கடற்கரை கிராமங்கள் மற்றும் 3 பேரூராட்சிகளுக்கு தேவையான கபசுரக் குடிநீர் பொடி பாக்கெட்டுகள், கேன் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான நல்லரசு, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, மக்கள் நலனை காத்து வருகிறது. வருமுன் காப்போம் என்ற நிலையை மனதில் கொண்டு, ஒவ்வொரு தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள, மாநகர, நகர, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, சுற்றுப்புற பகுதிகள் தூய்மையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும், கடற்கரை கிராமங்களில், தீயணைப்புத்துறை வாயிலாகவும், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு வகையான மூலிகையினால் தயாரிக்கப்பட்ட முட்டையுடன் கூடிய கோழி பிரியாணி, மூலிகை கலந்த உயர்ரக மீன் குழம்பு, முருங்கை இலை முட்டை ஆம்லெட் போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஈரான் நாட்டிலிருந்து வந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை தாய் தமிழகம் கொண்டுவர, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நான் கோரிக்கை வைத்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், முதலமைச்சரும் உரிய நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் எடுத்த நடவடிக்கைகளின் பயனாகவும், அவர்கள் விரைவாக தாய்த்தமிழகம் திரும்பினார்கள்.

அவர்கள் குமரி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, 7 நாட்கள் நிறுவனத் தனிமைப்படுத்தி, தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு சிறந்த முறையில் தரமான உணவுகள் வழங்கப்பட்டது. அவர்கள் வீடு திரும்பும்போது மகிழ்வுடன் செல்லும் வகையில், தலா ரூபாய் ஆயிரமும், தலா 5 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.

மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு செய்தபோது, கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவுகள் வழங்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டது. இதனை, முதலமைச்சரிடம் தொலைபேசியில் தெரிவித்து, அதனடிப்படையில், நமது மாவட்டத்திலுள்ள, உயர்தர தனியார் உணவகங்கள் வாயிலாக தரமான, சத்தான உணவுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

சின்னத்துறை மக்களின் கோரிக்கையான தேங்காய்பட்டணம் துறைமுகத்திலுள்ள முகத்துவாரத்தில், மணல்மேடுகள் இருப்பதால், அதனை அகற்றுவதற்கு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து,
அதன் மூலம் தேங்காய்பட்டணம் முகத்துவாரத்தில் மணல்மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக அதற்கான உபகரணங்கள் லாரிகள் மூலம் வந்து கொண்டிருக்கிறது.அதுபோல, அழிக்காலில் கடல் சீற்றத்தால் வீடு சுவர் இடிந்து விழுந்து, உயிரிழந்த பிரதீப் அஸ்வின் குடும்பத்திற்கு, குமரி மாவட்ட கழகம் சார்பில் ரூ.1 லட்சமும், காயமடைந்த 2 நபர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதமும் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள், கடலில் மீன்பிடிக்க சென்று தவறி விழுந்து மரணமடைந்த, கோவளம் பகுதியை சார்ந்த அந்தோணி (வயது 68), காணாமல்போன முள்ளூர்துறையை சார்ந்த ஆன்றனி (வயது65), கன்னியாகுமரி பகுதியை சார்ந்த ஜேசுலிப்டன் (வயது 28), மார்த்தாண்டம்துறை பகுதியை சார்ந்த சிபு (வயது25) ஆகிய 4 மீனவர்களின் குடும்பத்திற்கு அ.இ.அ.தி.முக. சார்பில், தலா ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகையும் வழங்கப்பட்டது.

தற்போது, இப்பகுதியிலுள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும், கபசுரக்குடிநீர் வழங்கவும், அதற்கு தேவையான கபசுரக் குடிநீர் பொடி பாக்கெட்டுகள், கேன் உள்ளிட்ட உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. கபசுரக் குடிநீர் பொடி மிகவும் மருத்துவ சிறப்பு வாய்ந்தது. இதனை அருந்துவதின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். இதனை மனதிற்கொண்டு ஒவ்வொருவரும் கபசுரக் குடிநீரை தொடர்ந்து அருந்த வேண்டும்.

கொரோனா தடுப்பு பணிகளில் எங்களுக்கு உறுதுணையாக இருந்து, இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள, கேசவன்புத்தன்துறை பங்குத்தந்தை சி.ஜெகன், பள்ளம்துறை பங்குத்தந்தை சூசை ஆன்றனி ஆகியோர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக உருவாக்கிடும் கபசுரக் குடிநீரை அனைவரும் பருக வேண்டுமென, கடலோர கிராமங்களிலுள்ள
பகுதிகளில் அதிக அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது, மிகவும் பாராட்டுக்குரியது.

எனவே, இப்பகுதி பொதுமக்கள் குறிப்பாக, மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவ பெருமக்கள், கபசுரக் குடிநீரை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் வாயிலாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக பெற முடியும். ஒவ்வொருவரும் முககவசங்கள் கட்டாயம் அணிய வேண்டும், அவ்வப்போது கைகளை சோப் மற்றும் கை கழுவும் திரவம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு பணிகளில், தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. இதன்வாயிலாக, ஒவ்வொரு நடவடிக்கைகளும், மருத்துவ நிபுணர்களால் தீர ஆராயப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் இணைந்து மேற்கொண்டுவரும் சிறப்பான கொரோனா நோய் தடுப்பு பணிகளால், நமது மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மருத்துவர்களுக்கு தினந்தோறும் நோய் தடுப்பிற்கான 600 பி.பி.இ (பாதுகாப்பு) உபகரணங்கள், முககவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு, தேவையான உபகரணப்பொருட்கள் தட்டுபாடு இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் மாநகரத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி,; பேரூராட்சி பகுதிகளை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இறந்தவர்களின் உடலை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஒன்றியத்தில், வட்டார மருத்துவ அலுவலர்கள் வாயிலாக, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் சிறந்த முறையில் தங்களது பணிகளை ஆற்றி வருகிறார்கள். மக்கள் அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.

மேலும், கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கு, சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களின் ஆலோசனையின்படி வழங்கப்பட்டு வரும், இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உயர்ரக ஊசி மருந்து, நமது அரசு மருத்துவமனையில் தேவைக்கேற்ப இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 650 எண்ணம் இருப்பில் உள்ளது.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், இராஜாக்கமங்கலம் ஒன்றியச் செயலாளர்(கிழக்கு) வீராசாமி வரவேற்புரையாற்றினார். உதவி சித்த மருத்துவ அலுவலர் எஸ்லின் மிஷ்பா விளக்கவுரையாற்றினார். கேசவன்புத்தன்துறை ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.ஹெபின்சா நன்றி கூறினார்.