தற்போதைய செய்திகள்

கண்டமங்கலம்- கோலியனூர் ஒன்றியத்தில் ரூ.28.78 கோடியில் 524 வளர்ச்சி பணிகள் – அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல்

விழுப்புரம்,

கண்டமங்கலம் மற்றும் கோலியனூர் ஒன்றியத்தில் ரூ.28.78 கோடியில் 524 வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மற்றும் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ரூ.28.78 கோடி மதிப்பீட்டில் 524 பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

முன்னதாக கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கெங்கராம்பாளையம் ஊராட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக 2018- 19-ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற மல்லர் கம்பம் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த 10 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.34,000 மதிப்பீட்டில் ஊக்கத்தொகைக்கான காசோலையையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கைகள் இழந்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.51,000 மதிப்பீட்டில் நவீன செயற்கை கைகளும், கால்கள் இழந்த 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,25,000 மதிப்பீட்டில் நவீன செயற்கை கால்களும் என மொத்தம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,76,000 மதிப்பீட்டில் நவீன செயற்கை கை மற்றும் கால்களையும் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.