கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை
கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
கள்ள லாட்டரி, ஆன்லைன் ரம்மி, கந்துவட்டி கொடுமை என எதுவெல்லாம் தமிழக மக்களின் நலனுக்கு ஒவ்வாதென அம்மா அவர்களும், அம்மா அரசும் தடை செய்ததோ? அவையெல்லாம் தற்போது தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுகின்றன.
கந்துவட்டி கொடுமையால் காவலர் ஒருவரே தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்றால் சாமானியர்களின் நிலை என்ன ஆகும்? கந்துவட்டி மீண்டும் தலைதூக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.