தற்போதைய செய்திகள்

கமலின் தூண்டிலில் ரஜினி சிக்க மாட்டார் – கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி

கிருஷ்ணகிரி

கமலஹாசனின் தூண்டிலில் ரஜினிகாந்த் சிக்க மாட்டார் என்று கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறி உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் 4 இடங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்தில் வரும் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்தும், தேர்தலில் எவ்வாறு வியூகங்கள் அமைத்து வெற்றி பெற வேண்டும் என்பது குறித்தும் அவர் பேசினார். இந்த கூட்டத்தில் கழக தொண்டர்கள், மகளிர் அணியினர் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து தமிழர்களும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சொந்தங்கள். ஆனால் வாரிசுகள் என்று வருகின்ற போது கழகத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாரிசுகள். மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமலஹாசன், நடிகர் ரஜினிகாந்தோடு அரசியலில் இணைந்து செயல்பட தயார் என கூறியிருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை. கமலஹாசன் மீன் கிடைக்குமா என தூண்டில் போடுகிறார். ரஜினிகாந்த் ரொம்ப அனுபவம் உள்ளவர். கமலஹாசனின் தூண்டிலுக்கு ரஜினிகாந்த் சிக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.