தற்போதைய செய்திகள்

கமுதியில் சோலார் மின் உற்பத்தி திட்டம் – அமைச்சர் பி.தங்கமணி தகவல்

சென்னை

கமுதியில் சோலார் மின்உற்பத்தி திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில்  உறுப்பினர்களின் கேள்விகளும், அதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி அளித்த பதிலுரை வருமாறு:- 

உறுப்பினர்: பெரியண்ணன் அரசு: புதுக்கோட்டை தொகுதி, கருக்காக்குறிச்சியில் 110 கி.வோ திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க அரசு முன்வருமா?

அமைச்சர் பி.தங்கமணி: இன்று தமிழகத்தில் ஒரு விவசாயி என்று சொன்னால், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாத்த விவசாயியாக, காவேரியின் காப்பாளராக பட்டம் பெற்றிருக்கின்ற முதலமைச்சரை வாழ்த்தி, துணை முதலமைச்சரை வணங்குகிறேன். உறுப்பினர் கோரிய கருக்காக்குறிச்சியில் துணை மின்நிலையம் அமைத்திட இடம் கண்டறியப்பட்டிருக்கின்றது. ஏற்கெனவே கொடுத்த இடம் நீர்நிலை புறம்போக்காக இருக்கின்ற காரணத்தினால், மாற்று இடம் கேட்டிருக்கின்றோம். மாற்று இடம் கிடைக்கப் பெற்றவுடன், துணை மின் நிலையம் அமைப்பதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்: பெரியண்ணன் அரசு: புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், பட்டத்திக்காடு, கரு. தெற்கு தெரு ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கும் நடுவில் சரியான இடம் உள்ளது. இடையில் 110 கி.வோ திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அமைச்சர் பி.தங்கமணி, நான் ஏற்கெனவே சொன்னதைப்போல, இடமிருந்தால் உடனடியாக துணை மின்நிலையம் அமைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஏற்கெனவே கொடுத்த இடம் நீர்நிலை புறம்போக்காக இருக்கின்ற காரணத்தினால் மாற்று இடம் கேட்கப்பட்டிருக்கின்றது. இப்பொழுது உறுப்பினர் அவர்கள் கருக்காக்குறிச்சியில் துணை மின் நிலையம் வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். இப்பொழுது ஆலங்குடியிலிருந்தும், கருப்பங்குடியிலிருந்தும் உங்களுக்கு மின்சாரம் வந்துகொண்டிருக்கின்றது. மின் பளு குறைவாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், இப்பொழுது துணை மின் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து, காலதாமதம் ஆனாலும்கூட, உடனடியாக அங்கேயிருக்கின்ற மின் பளுவை அதிகப்படுத்த வேண்டுமென்பதற்காக 1X16 டிரான்ஸ்பார்மர் -ஐ, இப்பொழுது 1X25 ஆக மாற்றுவதற்குண்டான ஆணையை பிறப்பித்திருக்கின்றோம். அந்தப் பணிகள் நடைபெறும். இடம் தேர்வு செய்த பிறகு உடனடியாக அந்தப் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர் கடந்த முறை என்னிடத்திலே துணை மின் நிலையம் அமைத்துத் தர வேண்டுமென்று கேட்டிருந்தார். அவருடைய தொகுதியான வம்பன் பகுதியில் இடம் கண்டறியப்பட்டிருக்கின்றது. உடனடியாக அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. அதேபோல பூவரசுகுடியிலும் நிலம் கண்டறியப்படவிருக்கின்றது. எல்.என்.புரத்திற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. அங்கேயும் துணை மின் நிலையம் அமைப்பதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரையில், அங்கே விவசாயிகள் அதிகமாக இருக்கின்றார்கள். அங்கே மின்பளு அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இதுபோன்று துணை மின் நிலையங்கள் அமைக்க வேண்டுமென்று முதலமைச்சர் ஆணையிட்டு அந்தப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

பொதுவாக, மின்சார வாரியத்தில் இதுகாறும், வருடத்திற்கு 50-லிருந்து 60 துணை மின் நிலையங்களை மட்டும்தான் அமைப்பார்கள். இந்த 4 ஆண்டு காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 340 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆக, அம்மா அவர்களுடைய அரசான அண்ணன் அவர்களுடைய அரசு மக்களுக்கு என்ன தேவையோ அதை உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டுமென்ற அடிப்படையிலே தான் நாங்கள் பணியாற்றி கொண்டிருக்கின்றோம். உறுப்பினர்களுக்கு நானும் இந்த சட்டமன்றத்தில் பலமுறை சொல்லியிருக்கின்றேன். இடம் கிடைப்பது அரிதாக இருக்கின்றது. அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்தைத் தேர்வு செய்து கொடுப்பார்கள் என்று சொன்னால், உடனடியாக துணை மின் நிலையங்களை அமைப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது.

உறுப்பினர்: பெரியண்ணன் அரசு: இடம் இருக்கிறது. பட்டத்திக்காடு, கரு.தெற்குத் தெரு இரண்டு பஞ்சாயத்துகளுக்கு நடுவிலே உள்ள இடம் நிச்சயமாக உங்களுக்குப் பயன்படக்கூடிய வகையிலே இருக்கும். அந்தப் பணியை நிவர்த்தி செய்ய வேண்டுமென்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர் பி.தங்கமணி : பொதுவாக சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய எண்ணம். அந்த அடிப்படையில்தான் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உறுப்பினர் அவர்கள் சொல்கின்ற புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் திடீரென்று மின்னழுத்தம் அதிகமாக இருக்கின்றது அல்லது குறைவாக இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றார்கள். அதனை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர்: ஆர்.நடராஜ்: மயிலாப்பூரில் பல இடங்களில் மின்னழுத்தம் குறைவாக இருக்கிறது. அதனை கருத்தில்கொண்டு ஒரு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை இந்த சட்டசபையில் வைத்தேன். அமைச்சர், முதலமைச்சர் ஒப்புதலோடு ஆணையைப் பெற்று, அதற்கான ஆணையைப் பிறப்பித்தார்கள். அதற்கான இடமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பணியை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர் பி.தங்கமணி: சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டுமென்பதற்காக முதலமைச்சர் 110 விதியின்கீழ் அறிவித்த 56 துணை மின் நிலையங்கள் கிட்டத்தட்ட பாதியளவுக்கு முடியும் தருவாயில் இருக்கின்றது. உறுப்பினர் சொல்வதைப் போல, எந்தந்த பகுதியில் இடம் கிடைக்கின்றதோ, முன்னுரிமை அடிப்படையில் அந்தப் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்படுகின்றது. உறுப்பினர் மயிலாப்பூர் பகுதியில் அதுபோன்ற இடம் இருக்கிறது என்று சொல்லி இருக்கின்றார்கள். உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினர்: கு.பிச்சாண்டி:- இந்த 110 கி.வோ என்பது இப்போது பல்வேறு இடங்களில் 33 கி.வோ இருக்கிறது. என்னுடைய தொகுதியிலே, மங்களம் கிராமத்தில் அதை 110 கி.வோ ஆக மாற்றி தந்தால் அந்தப் பகுதியில் இருக்கின்ற விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கும், அதிகளவு மின்சாரம் கிடைப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி, இப்போது ளடிடயச மின்சாரம் தயாரிப்பதிலே கர்நாடகம் 20,000 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் இன்றைக்கு அதிகளவில் சோலார் மின்சாரம் தயாரிக்கக்கூடிய அந்தத் திட்டத்தைத் தந்திருக்கிறார்கள். அதுபோல நம் கடலாடிக்கு கொடுத்திருக்கக்கூடிய திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியிருக்கிறது ஆகவே, அதை நிவர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?

அமைச்சர் பி.தங்கமணி: உறுப்பினர் முதலில் தெரிவித்த கோரிக்கை, இந்த 33 கி.வோ. ஐ, 110 கி.வோ ஆக மாற்றித் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆகவே அந்த இடத்தில் மின்பளு எவ்வளவு இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து, அவ்வாறு மின்பளு அதிகமாக இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, உறுப்பினர் கர்நாடகாவில், விவசாயிகளுடைய இடத்தை குத்தகைக்கு எடுத்து, சுமார் 8,000 மெகா வாட் அளவிற்கு போட்டிருக்கின்றார்கள்.

அதுபோன்ற ஒரு நிகழ்வை இங்கே நாங்களும் ஏற்பாடு செய்திருக்கின்றோம். இருந்தாலும் கூட இப்போது உறுப்பினர்கள் அவர்கள் சொன்ன இந்த மத்திய அரசு கடலாடியில் என்னப் பிரச்சினை என்று சொன்னால், இடம் எடுப்பதிலே உச்சநீதிமன்றம் ஒரு தடையாணை வழங்கியிருக்கின்றது. அந்தத் தடையாணை நீங்கியதற்கு பின்னால் தான் அந்த இடத்தை நாங்கள் கொடுக்க முடியும் என்று சொன்னால், அந்த காலக்கெடு முடிந்த காரணத்தினால் அந்த இடத்தை நாங்கள் ரத்து செய்து விட்டோம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

அதற்கான மாற்று இடமாக முதுகளத்தூர் கமுதியில் கொடுத்திருக்கின்றோம். அதனை ஆய்வு செய்வதாக சொல்லியிருக்கின்றார்கள். அதனை ஆய்வு செய்து உடனடியாக 500 மெகா வாட் போட்டு தருவதாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். நாளை மறுதினம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது அதற்கான விவரத்தினை விளக்கமாக அளிக்கிறேன் என்பதை உறுப்பினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.