தற்போதைய செய்திகள்

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து விட்டது விடியா அரசு

அமைச்சருக்கு, கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலடி

மதுரை

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கண்டனத்தை விடியா தி.மு.க. அரசு மறைத்து விட்டது என்று மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா பதிலடி கொடுத்துள்ளார்.

கழக அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் மக்களிடத்தில் பல்வேறு குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

மக்களிடத்தில் குறைகளை கேட்கும் போது, அதில் முதல் கோரிக்கை மின்கட்டண உயர்த்தி எங்களை தி.மு.க அரசு வஞ்சித்து விட்டதே என்று எங்களிடம் மக்கள் பொங்கி எழுந்தனர். மின் கட்டணத்தை உயர்த்திய மக்கள் விரோத தி.மு.க. அரசை கண்டித்து எடப்பாடியார் ஆணைக்கிணங்க, தமிழக முழுவதும் 75 மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டார். அவருக்கு சில கேள்வியை நான் முன் வைக்கிறேன்.

கொரோனா தொற்று சூழ்நிலையில் இருந்து, பழைய நிலைமைக்கு மாற மக்கள் இன்னும் முழுமை அடையவில்லை, ஆனால் தற்போது மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. கடந்த 2011 தி.மு.க ஆட்சியில், தமிழகம் இருளில் மூழ்கி இருந்தது.

அதனை தொடர்ந்து, புரட்சித்தலைவி அம்மா அவர்கள், தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினார். அதனை தொடர்ந்து எடப்பாடியாரும் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக செயல்படுத்தி தங்கு தடையின்றி மின்சாரத்தை வழங்கினார்.

மத்திய அரசும் அழுத்தம் கொடுத்தால் கூட அதை மக்கள் மீது சுமத்தாமல், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் அம்மா ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 3 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். ஆனால் தமிழக அரசு கருத்து கேட்கும் கூட்டத்தில் மக்கள் கண்டனத்தை தெரிவித்தனர். அதையெல்லாம் மறைத்து விட்டனர். மின் கட்டண உயர்வை யாராவது ஆதரித்து கருத்து தெரிவித்தால் அதை வெளியிட இந்த விடியா தி.மு.க. அரசு தயாரா?

தற்போது திமுக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. குறிப்பாக ஒரு யூனிட் மின் கட்டணம் 27.50 காசு முதல் ரூ1.25 வரை உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது, சில பிரிவினருக்கு 52 சதவீதம் வரை மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. இதில் 100 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தும் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்படைவார்கள்,

சேவை கட்டணம், மீட்டர் காப்பு தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம் என புதிதாக மும்முனை மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் கடந்த 2018ம் ஆண்டில் ரூ.7,450 ஆக இருந்தது. ஆனால் தற்போது அந்த கட்டணம் ரூ.54,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டை ஒப்பிடும்போது 625 சதவீதம் அதிகமாக இது உள்ளது.

அதேபோல் தொடர்ந்து 2018ம் ஆண்டு புதிய ஒருமுனை மின் இணைப்பு பெறுவதற்கு 1,600 ரூபாய் கட்டணம் இருந்தது. தற்போது ரூ 9,250 அதிகரிக்கப்பட்டுள்ளது கடந்த 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 501 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த புதிய மின் கட்டணம் உயர்வின் படி இரு மாதங்கள் சேர்ந்து வீடுகளில் 401 முதல் 500 வரை யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர் தற்போது 500 யூனிட் பயன்படுத்தினால் 1,130 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் தற்போது மின் கட்டண உயர்வால் 1,725 ரூபாய்கட்டணம் செலுத்த வேண்டும் இது 52.60 சதவீதம் அதிகமாகும்,

மின்கட்டண உயர்வால் தொழில் முனைவோர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள், குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படும். குறிப்பாக தமிழகத்தில் 2.26 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன. இந்த மின் கட்டண உயர்வால் அந்த நிறுவனங்கள் பாதிப்படைந்து அங்கு பணிபுரியும் தொழிலாளருக்கு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும்,

அதேபோல் வணிக நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வால் 20 லட்சம் நிறுவனங்கள் பாதிப்படையும் அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படையும். குறிப்பாக தமிழகத்தில் மறைமுகமாக விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சர் அண்டை மாநிலங்களை ஒப்பிட்டும், மத்திய அரசு மீது பழியை சுமத்தி, மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி பேசுகிறார். அப்படி ஒப்பிட்டு பார்க்க விரும்புவோர் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மின் கட்டணம் எப்படி இருந்தது.

தற்போது நீங்கள் எவ்வளவு விலை ஏற்றம் செய்துள்ளது என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்படி ஒப்பீடு என்றால் தமிழகத்தில் தொடங்க தயாராக இருந்த இரண்டு நிறுவனங்கள், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்றது அதை நீங்கள் ஒப்பிட்டு கூறுவது தானே.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று 2016ம் ஆண்டில் ஒரு கோடி மக்கள் பயன்பெறும் வண்ணம் 100 யூனிட் மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கும் 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது 700 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு 70 பைசா அதிகரித்து பட்டுள்ளது. குறிப்பாக விசைத்தறிக்கு கூடுதலாக 32 சதவீதம் இதன் மூலம் மின் கட்டணம் அதிகரிக்கும். இதனால் அவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களுக்கு மின்சாரம் உயர்த்தி வழங்கப்படும் என்று கூறினீர்கள்.

அதற்கு மாறாக மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மதுரை மாவட்டத்தில் 12,000 நெசவாளர் குடும்பங்கள் மிகவும் பாதிப்படையும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா கூறினார்