தற்போதைய செய்திகள்

கரூரில் நீதிமன்ற அறைகள் திறப்பு விழா – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்றார்

கரூர்,

கரூரில் நடைபெற்ற நீதிமன்ற அறைகள் திறப்பு விழாவில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்றார்.

கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படத்தக்க சாட்சிகளை விசாரிப்பதற்கான நீதிமன்ற அறைகளை ரூ.3 கோடியே 33 லட்சம் மதிப்பில் 906 சதுர மீட்டர் பரப்பளவில் அமைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி நேற்று அடிக்கல் நாட்டு விழா காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும், கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதியுமான டி.ராஜா கட்டட பணிகளுக்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி தலைமையுரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் டி.அன்பழகன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.பகலவன், கரூர் வழக்கறிஞர் சங்க தலைவர் என்.மாரப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் கரூர் அட்வகேட் அசோசியேசன் செயலாளர் பி.கே.வைத்தீஸ்வரன் கலந்து கொண்டார். கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி எம்.கிறிஸ்டோபர் வரவேற்புரை ஆற்றினார். இறுதியில் கரூர் தலைமை குற்றவியல் நடுவர் ஏ.மலர்விழி நன்றி கூறினார்.