சிறப்பு செய்திகள்

கலவரக்காரர்களை ஓட ஓட விரட்டியடிங்கள் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்

கோவை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கோவை மாநகராட்சி கொடிசியா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கோவை மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு கழகத்தின் சார்பில் ேபாட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 9 கால மாதம் ஆகியிருக்கிறது. இந்த 9 மாத காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்தார்? குறிப்பாக கோவை மாவட்ட மக்களுக்கு என்ன செய்தார்? இந்த கோவை மாவட்ட மக்களுக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார்? கோவை மாவட்ட மக்கள் என்ன நன்மை பெற்றனர் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

ஊடகங்களும், பத்திரிகையும் தான் இந்த அரசாங்கத்தை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறது, திட்டத்தையே நிறைவேற்றாமல் திட்டத்தை நிறைவேற்றிய மாதிரி ஊடகங்களையும், பத்திரிகைகளையும் வைத்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் முடக்கி கொண்டிருக்கின்றனர். அம்மா பெயரில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் முடக்கி கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சட்டம்- ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை திருட்டு, போதைப்பொருள் விற்பனை இது தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சர் நான் தான் என்று அவரே புகழ்ந்து கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். கழக அரசு இருக்கும்போது கோவை பூமி ஒரு அமைதிப் பூங்காவாக இருந்தது.

இன்றைக்கு கலவர பூமியாக மாற்றுவதற்கு சதி திட்டம் போடுகின்றது தி.மு.க., மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். எதற்கும் அஞ்சாமல் துணிவோடு நின்று யார்? தங்களுக்கு நன்மை செய்வார்கள் என்று சீர்தூக்கி பார்த்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும். கழக ஆட்சியில் போடுகின்ற திட்டம் நேரடியாக மக்களுக்கு சென்று சேர்ந்தது. ஆனால் தி.மு.க.வில் போடுகின்ற திட்டங்கள் அத்தனையும் அந்த கட்சியினுடைய குடும்பத்திற்கு தான் செல்கிறது.

கோவை மாவட்டத்திற்கு ஒரு அமைச்சரை போட்டுள்ளனர். இவர் பல கட்சிகளுக்கு போய் வந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். சுமார் 5 கட்சிகளுக்கு சென்று வந்தவரை தான் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமித்துள்ளனர். எதற்காக என்றால் என்னென்ன தில்லுமுல்லு செய்ய வேண்டும், என்னென்ன முறைகேடுகள் செய்ய வேண்டும் என அதையெல்லாம் செயல்படுத்துவதற்காக தான் அவரை கோவை மாவட்ட பொறுப்பாளராக தி.மு.க.

தலைவர் ஸ்டாலின் நியமித்துள்ளார். அடிக்கடி ஏன் மின்வெட்டு வருகிறது என்று கேட்டால் அணில் மின்கம்பியில் ஓடுகின்ற காரணத்தால் மின்வெட்டு வருகிறது என்று சொல்கின்ற அமைச்சரை தான் கோவை மாவட்டத்தினுடைய தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளனர். எங்கேயாவது அணில் போய் மின்வெட்டு வருமா?

கோவை புறநகர், நகராட்சி பேரூராட்சி மக்களுக்கு கொடுப்பதற்காக இங்கே உள்ள அணில் அமைச்சர் 80 லோடு ஹாட் பாக்ஸ் கொண்டு வந்து இறக்கி உள்ளார். இவர்கள் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள். இவர்கள் கொள்ளையடித்த பணத்தை வாங்கி கொள்ளலாம். ஆனால் ஓட்டு மட்டும் இரட்டை இலைக்கு மறக்காமல் அளியுங்கள். ஏனென்றால் மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கம் கழகம்.

கொள்ளையடிக்கின்ற இயக்கம் தி.மு.க.. கோவை மாநகராட்சியில் குனியமுத்தூர் பகுதியில் சுகுணாபுரம் கிழக்கு, கோவைப்புதூர், குளத்துப்பாளையம், இடையார்பாளையம் ஆகிய பகுதிகளில் கரூர் மற்றும் சென்னையை சேர்ந்த தி.மு.க.வினர் ஹாட் பாக்ஸ் பல இடங்களில் கொடுப்பதற்கு ஆரம்பித்துள்ளனர். கோவை புதூர் பகுதியில் கழக செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் இதை தட்டி கேட்கிறார்.

காவல்துறைக்கு தகவல் கொடுக்கிறார். அவரை கைது செய்து எங்கு வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. அவரை வேனில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இங்கு உள்ள இணை காவல் ஆணையரை இதற்காகவா சம்பளம் கொடுத்து வைத்துள்ளனர்.

எங்கே தவறு நடக்கிறதோ அதை கண்டுபிடித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது தான் காவல்துறை. காவல்துறைக்கு தவறு செய்பவர்களை சொல்லுகின்ற பொழுது அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, தகவல் சொல்லுகின்றவர் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.

காவல்துறையினர் நாட்டு மக்களை பாதுகாக்க கூடியவர்கள். பொதுமக்கள் காவல்துறைக்கு புகார் செய்தால் அதை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு துணையாக போகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது. கழக ஆட்சியின்போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது தமிழகத்தில், யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கொண்டிருந்தோம். அதுதான் கழக ஆட்சி.

ஆனால் இன்றைய தினம் கூலிப்படையை வைத்துக் கொண்டு கழக வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள். ஆங்காங்கே தவறுகள் நடைபெறுகின்ற பொழுது கழக பொறுப்பாளர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தால் அவர்களை மிரட்டி அவர்கள் மீது வழக்குப் போடுகிறார்கள்.

இதுவா காவல்துறை செய்கிற வேலை. தமிழ்நாடு காவல்துறை என்று சொன்னால் அதற்கு என்று ஒரு மரியாதை உள்ளது, இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை தமிழ்நாடு காவல்துறை. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக போற்றப்படுகின்ற காவல்துறை இன்றைக்கு தி.மு.க.வுக்கு ஏவல் துறையாக இருப்பது வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. இதை மாற்றி கொள்ள வேண்டும்.

இது ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய காவல்துறை அதிகாரிகளே இப்படி தரம் தாழ்ந்து போனால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அதற்கு உகந்த தண்டனையை விரைவில் வழங்குவார்கள். அதேபோல் பத்திரிகையாளர்கள் ஏதாவது பத்திரிகையில் எழுதினால் அவர்கள் மீது வழக்குப் போடுகிறார்கள்.

இதனால் தி.மு.க. இன்றைக்கு மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது. உண்மையிலேயே தில்லு, திராணி தி.மு.க.வுக்கு இருந்தால் நேரடியாக தேர்தலில் கழகத்தை எதிர்த்து வெற்றி பெற வேண்டும். அதை விட்டுவிட்டு குறுக்கு வழியை கையாண்டு வேட்பாளரை மிரட்டுவது, வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை மிரட்டுவது? தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டி புகார் செய்தால் அவர் மீது வழக்கு போடுவது இப்படியெல்லாம் கழகத்தை மிரட்டுவதாக நினைத்தால், நிச்சயமாக சொல்கிறோம், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.

கோவை மாநகரம் அமைதிப் பூங்காவாக இருக்கிற மாவட்டம். இதில் ஏதாவது கலவரத்தை ஏற்படுத்தி ஆதாயம் தேட முற்பட்டால் அந்த கலவரம் செய்கிறவர்களை ஓட ஓட இந்த கோவை மாவட்டத்தில் இருந்து விரட்டி அடிப்பார்கள். கழகத்தினர் ஏதோ சாதுவாக இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம், கழகத்தினருக்கும் செய்ய தெரியும். ஆனால் அதற்காக மக்கள் கழகத்தினரை தேர்ந்தெடுக்கவில்லை.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும், மக்களின் எண்ணத்தை புரிந்து அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். அதைத்தான் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் கழகத்தினருக்கு சொல்லி கொடுத்த பாடம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு பணி செய்வதற்காக தான்.

திமுகவினர் போல் ரவுடித்தனம் செய்வதற்காக அல்ல. அதேநேரத்தில் நாட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிற பொழுது அதை கழகத்தின் நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி, அம்மாவின் மறைவிற்கு பிறகும் கழகத்தினர் தொடர்ந்து சட்டத்தை மதித்து செயல்படுகிறார்கள். அதேநேரத்தில் சட்டத்திற்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால், குந்தகம் ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கும் கழகத்தினர் தயாராக இருக்கிறார்கள்.

என்றைக்கும் தர்மம், உண்மை, நீதி தான் வெல்லும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும். இது தான் சரித்திரம் ஆகவே எவ்வளவு பொய் பேசினாலும் மீண்டும் தர்மம் தான் வெல்லும். கழகத்தினர் எப்பொழுதும் நீதியையும், நேர்மையையும் கடைபிடிக்கிறவர்கள்.

தி.மு.க.வை போல பொய் பேசி ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற கட்சி அல்ல கழகம். நேர்மையாக உழைப்போம் மக்களின் மனதில் நிற்போம். வெற்றி பெறுவோம். கோவை மாவட்டம் கழகத்தின் கோட்டை என்பதை நிரூபித்து காட்டுங்கள். 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவை மாவட்டம் பத்துக்கு பத்து தொகுதியும் வென்று வரலாறு படைத்த மாவட்டம். அதனால் தான் ஸ்டாலினுக்கு பொறுக்க முடியாமல் கோவை மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தி அமைதியாக இருக்கின்ற பூமியில் சலசலப்பை ஏற்படுத்தி தில்லுமுல்லு செய்து, முறைகேடு செய்து எப்படியாவது வெற்றி பெறலாம் என்கின்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே மென்மேலும் நன்மைகள் செய்ய கழக வேட்பாளர்கள் வெற்றிபெற இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து வெற்றிபெற செய்யுங்கள். ஒவ்வொரு தொண்டனும் தான் தான் வேட்பாளர் என்று எண்ணி வீடு வீடாக சென்று நாம் செய்த சாதனைகளை சொல்லி வாக்குகளை பெறுங்கள். இப்பொழுது உள்ள தி.மு.க.

அரசாங்கம் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். தி.மு.க. அரசுக்கு வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தகுந்த பாடத்தை புகட்டுங்கள். கோவை மாநகராட்சி கழகத்தின் மேயராக வருவதற்கு நமது மாமன்ற உறுப்பினர் வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். அதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு கழகத்தை சேர்ந்தவர் தலைவராக வர வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு என்று கேட்டுக் கொள்கிறேன்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.