தற்போதைய செய்திகள்

கலை சிற்ப கோயில்களை சுற்றிப் பார்க்க தனி சுற்றுலா வழித்தடம் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தகவல்

சென்னை

கலை சிற்பங்கள் நிறைந்த கோயில்களை சுற்றி பார்க்க தனி சுற்றுலா வழித்தடம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்றுகேள்வி நேரத்தின்போது, உறுப்பினர் முருகுமாறன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் உள்ள வீராணம் ஏரியில் சுற்றுலா துறையின் மூலம் படகு குழாம் அமைக்கவும், சுற்றுலா தலமாக மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்விஎழுப்பினார்.

இதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் சென்னை கும்பகோணம், சேத்தியாதோப்பு காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள வீராணம் ஏரியை காண தினமும் குறைந்த அளவிலான பயணிகளே வருகிறார்கள். மேலும் கோடை காலங்களில் படகு இயக்குவதற்கு போதிய நீர் இருப்பு குறைவாக இருப்பதால், அங்கு படகு குழாம் அமைப்பதற்கு சாத்தியக் கூறு இல்லை.

அதே நேரத்தில் வீராணம் ஏரியை காண வரும் பொதுமக்களின் வசதிக்காக பொழுதுபோக்கு பூங்கா அமைக்க சாத்திய கூறு இருப்பதால் நிதி ஒதுக்கீடு செய்து பரிசீலிக்கப்படும். அதேபோல் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள அருள்மிகு பூவராக சாமி கோயிலானது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் அந்தகோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு தங்கும் விடுதி, கழிவறை வசதிகள் ஆகியவை அமைத்து தர அரசு பரிசீலனை செய்யும்என்றார். இதனை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் தனி சிறப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்கள் மிக சிறந்த சிறப்பங்களை கொண்ட, கலை செல்வம் நிறைந்த கோயில்களாக உள்ளன.

நவகிரக கோயில்களை சுற்றி பார்க்கவும், திருப்பதி போன்ற கோயில்களை சுற்றி பார்க்கவும், தனியாக சுற்றுலா வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கலை சிற்பங்கள் நிறைந்த கோயில்களை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க தனியாக ஒரு சுற்றுலா பாதை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டார். இதற்கு அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ஒவ்வொரு சுற்றுலா தலம் மற்றும் கோயில்களுக்கு தனி சிறப்புகள் உள்ளன. அங்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சென்று வர அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன.

உறுப்பினர் தங்கம் தென்னரசு தெரிவித்ததை போல், கலை சிற்பங்கள் நிறைந்த கோயில்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க வசதியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தனி சுற்றுலா பாதை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.