கல்வியில் புரட்சி செய்த ஒரே மாநிலம் தமிழகம்- வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பெருமிதம்

மதுரை,
இதுவரை 53 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி வழங்கி உலகளவில் கல்வியில் புரட்சி செய்த ஒரே மாநிலம் தமிழகம் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பெருமிதத்துடன் கூறினார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாணவ சமுதாயத்திற்கு 14 வகை கல்வி உபகரணங்களை விலையில்லாமல் வழங்கினார். அதன்படி முதலமைச்சரும் தற்போது வழங்கி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் 5.45 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
உலகளவில் கல்வியில் மாபெரும் புரட்சியை உருவாக்கும் வகையில் இதுவரை 53 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லாமல் மடிகணினி வழங்கப்பட்டுள்ளது. இதன்மதிப்பு 7,322 கோடி ரூபாய் ஆகும். இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியது அம்மாவின் அரசாகும்.
கடந்த பத்து ஆண்டுகளில் மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகம், காலணி, சீருடை, மிதிவண்டி, மடிகணினி ஆகிய திட்டங்களுக்கு மட்டும் 22,285 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக துணை செயலாளர் முத்துக்குமார், பகுதி கழக இணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேதுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.