தற்போதைய செய்திகள்

கழகத்தின் வெற்றி தொடரும் – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா உறுதி

நாமக்கல்

முதலமைச்சரின் பிரச்சாரம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் கழகத்தின் வெற்றி தொடரும் என்று அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா கூறினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்குறிச்சி பகுதியில், முதலமைச்சர் வருகையின்போது பெறப்பட்ட முதியோர் உதவித்தொகை கோரும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய்த் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா கலந்து கொண்டு 20 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும் பொன்குறிச்சி ஊராட்சி இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசியதாவது:-

தமிழக அரசு அனைத்து துறைகளிலும் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக வளம் கொழிக்கும், வளர்ச்சியடைந்த மாநிலமாக முதலமைச்சரின் நல்லாட்சி நடத்தி வருகிறார்.

அம்மா அவர்கள், 2007-ம் ஆண்டு கட்சியின் ஆண்டு துவக்க விழாவை ராசிபுரத்தில் நடத்தி தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதேபோல தற்போது வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தேர்தல் பிரச்சாரத்தை ராசிபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கியுள்ளார். இதனால் கழகம் தொடர்ந்து வெற்றியை பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமையும்.

கொரோனா பாதிக்கப்பட்ட காலத்தில் வீடுகள் தோறும் சென்று பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்து தந்துள்ளது. மக்கள் பணியை முதன்மையாக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. அம்மா அவர்கள் கூறியது போல கழகம் தொடர்ந்து 100 ஆண்டு காலம் ஆட்சி அமைக்கும். 1991, 2001, 2011, 2016 ஐ போல 2021-லும் கழகம் வெற்றி பெறும். தமிழகத்தில் கொரோனா காலத்தில் தி.மு.க. எம்பிக்கள் யாரும் பொதுமக்களுக்கு நன்மை செய்யவில்லை.

முதலமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல்லில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது பொன்குறிச்சி பகுதியில் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். ராசிபுரம் அடுத்த பொன்குறிச்சி பகுதியில், முதல்வர் வருகையின்போது பெறப்பட்ட முதியோர் உதவித் தொகை கோரும் மனுக்கள்மீது எடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கையாக, இன்று உடனுக்குடன் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்களின் தேவைகளை கேட்டு, நிவர்த்தி செய்து வருகிறார். இந்த தேர்தல் சுற்றுப்பயணம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கழக அரசு மீண்டும் அமைய பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசினார்.