தற்போதைய செய்திகள்

கழகத்துக்கு ஓட்டு போடுங்கள்’ திமுகவுக்கு வேட்டு வையுங்கள்-விந்தியா பிரச்சாரம்

தேனி

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தா பேஜாரு, எனவே கழகத்துக்கு ஓட்டு போடுங்கள், தி.மு.க.வுக்கு வேட்டு வையுங்கள் என்று கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின்போது கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா பேசியதாவது:-

குரலை வைத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தவர் திமுகவினர். இரண்டு விரலை காட்டி ஆட்சியை பிடித்து மக்களுக்கு நல்லது செய்தவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா.

கழகத்தில் மட்டுமே அடிமட்ட தொண்டன் கவுன்சிலர் ஆகலாம், எம்.எல்.ஏ. ஆகலாம், எம்.பி. ஆகலாம், அமைச்சர் ஆகலாம், ஏன் முதலமைச்சர் கூட ஆகலாம். அதுவும் தலைவர்கள் இருக்கும் போதே அடிமட்ட தொண்டன் முதல்வராக முடியும் என்பதை நிரூபித்த கட்சி கழகம்.

தேனி மாவட்டம் அணைகளின் மாவட்டம், ஆறுகளின் மாவட்டம், வற்றாத நதி ஓடும் மாவட்டம். நீங்கள் பாசமானவர்கள் நேசம் உள்ளவர்கள். ரோசமானவர்கள். கழகத்தை காக்கும் அய்யனாராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். தேர்தல் களத்தில் அவருக்கு தோல்வியே கிடையாது.

தேனி மாவட்டம் கழகத்தின் வெற்றி களமாகும். திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பார்கள். கழகத்தினர் நேர்மையானவர்கள், கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவார்கள். திமுகவினர் ஆட்சியில் இருந்தால் பாராட்டு விழா நடத்துவார்கள்.

ஆட்சியில் இல்லை என்றால் தேர்தல் சமயத்தில் மட்டும் வேஷம் போடுவார்கள். ஸ்டாலின் மாணவர், விவசாயி என பல வேஷங்கள் போடுவார். விட்டால் பூசாரி வேஷம் போட்டு பேய் கூட ஓட்டுவார். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஸ்டாலின் தலைமையில் நமக்கு நாமே என்று சொல்லி மக்கள் ஆதரவை பெற முயன்றார்கள். அது பலிக்கவில்லை. அடுத்து கோபப்படுங்கள்…கோபப்படுங்கள்… என்று கூறி பார்த்தார்கள். அதுவும் மக்களிடம் எடுபடவில்லை.

இதனால் கலக்கமடைந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறவை மாட்டை காணோம், தி.மு.க. ஆட்சி காலத்தில் கொடுப்பதாக கூறிய 2 ஏக்கர் நிலத்தை காணோம் என்று சொன்னார்கள்.

உடனே கைப்புள்ள சங்கத்த கலச்சுடுனு சினிமா படத்தில் வரும் வடிவேல் காமெடி போல கிராம சபை கூட்டத்தை ஸ்டாலின் கைவிட்டு விட்டார். அடுத்து அவர் விடியலை நோக்கி புறப்பட்டார். ஆனால் மக்கள் எங்களுக்கு ஏற்கனவே விடியல் வந்துவிட்டது என்று கூறிவிட்டார்கள்.

தற்போது தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் ஒரு விளம்பர பாடலை வெளியிட்டுள்ளார். அந்த பாடல் ‘ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு’ என்று தொடர்கிறது. ஆனால் உண்மையில் அந்த பாடலின் வரிகள் இப்படி தான் இருக்க வேண்டும்.

அதாவது, ‘ஸ்டாலின் தான் வராரு, மக்கள் எல்லாம் உஷாரு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தா பேஜாரு, பிரியாணி கடையை அடிப்பாரு, பியூட்டி பார்லர்ல உதைப்பாரு, செல்பி எடுத்தா அடிப்பாரு, பிள்ளைய மட்டும் வளப்பாரு, விக்கு வச்சுக்கிட்டே சிரிப்பாரு, இதுதான் அவர் வரலாறு’ என்று தான் இருக்க வேண்டும்.

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று புரட்சித்தலைவி சொன்ன வார்த்தை அல்ல. அவர் வாழ்ந்த வாழ்க்கை. மண்ணுக்குள் போகும் வரை மக்களுக்காக உழைத்தவர் புரட்சித்தலைவி. இப்பொழுது கொடுத்துள்ள வருடத்திற்கு ஆறு இலவச சிலிண்டர்கள் குடும்பத் தலைவிக்கு ரூ.1500, இலவச வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் கழக அரசு நிறைவேற்றும்.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க.வினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதாரண கடைக்காரர்கள் முதல் வணிக நிறுவனங்கள் வரை மிரட்டி கமிஷன் பெறுவார்கள். ஆனால் மக்களின் பிரச்சினைகளை என்றுமே காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.

ஆனால் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அப்படி அல்ல. மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவை போல் மக்கள் நலனையே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார். எனவே அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கழகத்தின் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போட்டு தி.மு.க.வுக்கு வேட்டு வையுங்கள்.

இவ்வாறு கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் விந்தியா பேசினார்.