தற்போதைய செய்திகள்

கழகத்துக்கு 100 சதவீத வெற்றியை மக்கள் பரிசாக வழங்குவார்கள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை

ஸ்டாலின் எப்போதும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மக்கள் முடிவு எடுத்து விட்டனர். கழகத்திற்கு 100 சதவீத வெற்றியை வழங்குவார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

தமிழக முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந்தேதி பதவியேற்று அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். பல்வேறு சாதனைகளை படைத்த அவர் தற்போது ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 4 ஆண்டுகள் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் லட்சிய முழக்கங்களை தனது வேதவாக்காக எண்ணி இன்றைக்கு ஒட்டு மொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு சிறப்பான மக்கள் ஆட்சி நடத்திய முதலமைச்சருக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதலமைச்சருக்கும் கழக அம்மா பேரவையின் சார்பில் கோடான கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்

கடந்த நான்காண்டு காலத்தில் 20,500 கோப்புகளில் கையெழுத்திட்டு கடைக்கோடி மக்களுக்கும் திட்டங்களை செய்துள்ளார் முதலமைச்சர். அது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்கை உருவாக்கி கடைக்கோடியில் இருக்கும் சாமானிய மக்களுக்கு மருத்துவ தேவையை பூர்த்தி செய்து உள்ளார்.

நான்கு ஆண்டுகளில் நூறாண்டு பேசும் சரித்திர சாதனைகளை முதலமைச்சர் படைத்து உள்ளார்.மக்கள் குறைகளை போக்குவதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் வழிகாட்டியாய் திகழ்கிறார்.

குக்கிராமத்தில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கும் வகையில் யாரும் கோரிக்கை வைக்காத வகையில் சட்டமன்றத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி அதன் மூலம் இன்றைக்கு 435 அரசு பள்ளி மாணவர்களை மருத்துவ படிப்பை வழங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாது இதற்குரிய செலவை அம்மா அரசு ஏற்கும் என்று அறிவித்துள்ளார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். இதன்மூலம் அடுத்த ஆண்டு இன்னமும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்கும்.

கடந்த பிப்ரவரி 5-ம்தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவை தொகையான ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து அதற்குரிய சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

கடந்த பத்து வருடங்களில் தமிழ்நாட்டிற்கு ரூ.6,85,071 கோடி அளவில் தொழில் முதலீடுகள் ஈக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது கொரோனா தொற்று காலத்தில் ரூ. 86,478 கோடி அளவில் இந்தியாவில் தொழில் முதலீட்டை ஈர்த்த ஒரே மாநிலம் தமிழகம் தான்.

இந்த நான்காண்டுகளில் மத்திய அரசின் நல் ஆளுமை முதல் மாநிலம் விருது, நீர் மேலாண்மையில் முதலிடம், இந்தியா டுடே ஆய்வில் தொடர்ந்து தமிழகம் மூன்று ஆண்டுகளாக முதலிடம் , உணவு தானிய உற்பத்தியில் ஐந்து முறை மத்திய அரசின் கிருஷி கர்மான் விருது, தொடர்ந்து பொருளாதார மேம்பாட்டில் மூன்று ஆண்டுகளாக முதலிடம்,

சுகாதாரத்துறையில் முதலிடம், உடல் உறுப்பு தானத்தில் முதலிடம், இந்தியாவிலேயே வேலைவாய்ப்பு அளிப்பதில் முதலிடம், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முதலிடம். இப்படி இந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தை முதலிடத்தில் எடுத்துச்சென்று பாரதப்பிரதமரின் பாராட்டை பெற்றது மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து மாபெரும் சாதனை படைத்தவர் தான் நமது முதலமைச்சர்.

இந்த அரசு 4 நாள் தாங்காது என்று எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். ஆனால் 400 ஆண்டுகளுக்கு தேவையான திட்டங்களை 4 ஆண்டுகளில் நிறைவேற்றி முதலமைச்சர் சரித்திர சாதனை படைத்துள்ளார். 100 நாட்களில் மக்கள் குறைகளை தீர்ப்பேன் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் எப்போதும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நூறு சதவீத மக்கள் முடிவெடுத்து விட்டனர்.

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து இந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிய அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வரும் முதலமைச்சருக்கு வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றி என்ற பரிசை கழகத்திற்கு மக்கள் வழங்குவார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.