தற்போதைய செய்திகள்

கழகத்தை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த இணைந்து பாடுபடுவோம் -அமைச்சர்கள் வேண்டுகோள்

வேலூர்

கழகத்தை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என்று நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மாவட்ட கழக அலுவலகத்தில் ஒன்றிய, நகர பேரூர் கழக நிர்வாகிகளிடம் வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் கோ.ம.புஷ்பநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவி.சம்பத்குமார், கேஜி.ரமேஷ், மாவட்ட கழக துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட கழக இணை செயலாளர் லீலா சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கழக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி.வீரமணி,
மாவட்ட கழக துணை செயலாளரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபீல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா சட்டமன்றத்தில் சொல்லியது போல் நூறு ஆண்டுகளானாலும் கழகம் என்ற பேரியக்கம்தான் தமிழகத்தில் மக்கள் பணி செய்யும். அம்மா அவர்கள் கண்ட கனவை நிறைவேற்ற அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடனும் விசுவாசத்துடனும் தேர்தல் பணியாற்றவேண்டும். கிராமம் கிராமமாகச் சென்று புதிய வாக்காளர்களை கண்டுபிடித்து அவர்களை சேர்க்க வேண்டும்.

திமுக கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே அதிகாரிகளை மிரட்டுகின்றனர். பியூட்டி பார்லருக்கு சென்று பெண்களை அடித்து உதைக்கின்றனர். பிரியாணி கடைக்கு சென்று ஓசி பிரியாணி கேட்டு கடை உரிமையாளர்களை அடிக்கின்றனர். அதிகாரிகளை நாகரிகம் இல்லாமல் பேசுகின்றனர். இதுவே திமுக கட்சிக்கு கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும்.

கழக ஆட்சியை பொதுமக்கள் விரும்புகின்றனர். வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட வாணியம்பாடி , ஜோலார்பேட்டை திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெற வேண்டும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை மீண்டும் முதல்வராக அரியணையில் அமர்த்த அனைவரும் அல்லும் பகலும் அயராது பாடுபடவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசியதாவது:-

கருவறை முதல் கல்லறை வரை மக்களுக்கு திட்டங்களை கொடுக்கின்ற ஆட்சி அம்மாவின் ஆட்சி மட்டும்தான்.
புரட்சிகரமான திட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. நில அபகரிப்பு, மின்வெட்டு,
கட்ட பஞ்சாயத்து , ஆகியவை கிடையாது. எங்கு பார்த்தாலும் திட்டங்கள்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. தமிழகம் இன்று அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. இதையேதான் மக்களும் விரும்புகிறர்கள். தன்னுயிரை துச்சமாக நினைத்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் களத்தில் இறங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். 2011-ம் ஆண்டு முதல் இன்று வரை

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுவருகின்றது. வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெறுவது உறுதி. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை மீண்டும் முதல்வராக அரியணையில் அமர்த்த அனைவரும் அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும். தொண்டர்கள் ஒற்றுமையுடனும் விசுவாசத்துடனும் செயல்பட்டால் நம்முடைய வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எ.டில்லிபாபு, குட்லக் ரமேஷ், நாகேந்திரன், ஜிலானி, சரவணன், முனுசாமி, கேஎம்.சங்கர் ஏ.வி.குமார், மஞ்சுளா கந்தன், குமார், வாசுதேவன், தனஞ்சயன், இளங்கோ, ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆர்.ரமேஷ், பி.கே.சிவாஜி, ஆர்.வெங்கடேசன், ஜோதி ராமலிங்க ராஜா, செந்தில்குமார், சீனிவாசன் சாம்ராஜ், மணிகண்டன்,
நகரக் கழகச் செயலாளர்கள் எம்.மதியழகன், டி.டி.குமார், ஜி.சதாசிவம் பேரூராட்சி செயலாளர்கள் சரவணன், பாண்டியன், மகான் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.