தற்போதைய செய்திகள்

கழகம் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது – அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

விழுப்புரம்

கழகத்தின் ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விக்கிரவாண்டி வடக்கு, தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டியில் மாவட்ட கழக செயலாளரும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. முத்தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., விக்கிரவாண்டி ஒன்றிய கழக செயலாளர்கள் எசாலம் பன்னீர், முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூர்ண ராவ் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

கட்சி தொடங்கிய 50 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஒரே இயக்கம் கழகம் தான்.
அம்மாவின் ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார். கழகத்தினர் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று தைரியமாக கூற முடியும். ஆனால் மற்ற யாரும் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று கூற முடியாது.

தேர்தல் சமயங்களில் தி.மு.க. கவர்ச்சியான, பொய்யான திட்டங்களை மக்கள் மத்தியில் கூறி ஓட்டு கேட்டு வருவார்கள். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் ஏமாந்தது போன்று இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவோடு பெரிய வெற்றியை கழகம் பெற்றது. வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் எவ்வித கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையுடன் தேர்தல் களத்தில் மக்களை சந்தித்து ஓட்டுகளை பெறவேண்டும். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைய போவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.