தற்போதைய செய்திகள்

கழக அரசின் சாதனை புத்தகம் பொதுமக்களுக்கு விநியோகம் – கழக நிர்வாகிகளுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உத்தரவு

திருவண்ணாமலை

கழக அரசின் சாதனை புத்தகங்களை பொதுமக்களை தேடி ெசன்று வழங்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றியம், கண்ணமங்கலம் பேரூராட்சி, ஆரணி வடக்கு ஒன்றியம், ஆரணி தெற்கு ஒன்றியம், ஆரணி நகராட்சி, செய்யாறு ஒன்றியம் பகுதிகளை சேர்ந்த கிளைக்கழக நிர்வாகிகள், முன்னாள் ஊராட்சி செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்பபிரிவு நிர்வாகிகள் உட்பட 5000 பேருக்கு தீபாவளி பரிசு பொருட்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வண்ணாங்குளம், கண்ணமங்கலம், குண்ணத்தூர், சேவூர், வெள்ளேரி, தச்சூர், தேவிகாபுரம், விண்ணமங்கலம், கடுகனூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் கழக ஆட்சி மீண்டும் அமைய கழகத்தினர் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் 21, 22, டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் பூத் வாரியாக வாக்காளர் சேர்க்கும் பணி நடைபெறுகிறது.

அப்போது தங்கள் பகுதியில் 18வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் சேர்க்க வேண்டும். அது மட்டுமல்ல இடம் மாறுதலானவர்கள், இறந்தவர்களை கண்டறிந்து பெயர்களை நீக்க வேண்டும். புதிதாக குடிவந்தவர்களையும் கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க வேண்டும். எதிர்க்கட்சியினர் ஏதாவது தில்லுமுல்லு செய்வார்கள். நீங்கள் கவனமாக செயல்படுங்கள்.

கழக அரசின் சாதனைகளை முதல்வரின் ஆணைக்கிணங்க புத்தகமாக தருகிறோம். அப்புத்தகத்தை பொதுமக்களிடம் கொடுத்து விளக்கி கூற வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் ஆரணி சட்டமன்ற தொகுதியில் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் ப.திருமால், ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட பொருளாளர் அ.கோவிந்தராசன், நகர செயலாளர் எ.அசோக்கமார், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலாளர் பாண்டியன், மாவட்ட விவசாய அணி செயலாளர் அரையாளம் வேலு, நகர மாணவரணி செயலாளர் கே.குமரன், மாவட்ட தகவல் தொழில் நுட்பபிரிவு செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.