தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியின் சாதனைகளே வெற்றியை தேடி தரும் – அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி

கடலூர்

கழக ஆட்சியின் சாதனைகளே வெற்றியை தேடி தரும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகி கழகத்தில் இணையும் விழா கடலூர் மத்திய மாவட்ட அலுவலகம் பாதிரிகுப்பத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடலூர் நகர செயலாளர் ஆர்.குமரன் தலைமை தாங்கினார். எம்.சி.எஸ்.பிரவீன் முன்னிலை வகித்தார்.

கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி 100 க்கும் மேற்பட்டோர் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து அமைச்சர் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

நமது கழகத்தில் மட்டும் தான் ஜனநாயகம் வேரோடி கிடைக்கின்றது. இந்த கட்சியில் மட்டும் யார் வேண்டுமானாலும் எந்த பொறுப்புக்கும் வரலாம். இங்கு உழைப்பவர்களுக்கு உயர்வுண்டு. விசுவாசமாக இருப்பவர்களுக்கு பதவி உண்டு. தமிழகத்தில் எண்ணற்ற இளைஞர்கள் கழகத்தில் மட்டுமே உள்ளனர்.

இளைஞர்களின் ஆற்றலை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா அவர்கள் கழகத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை என்ற அமைப்பையே ஏற்படுத்தினார். கடந்த 2011-16-ம் ஆண்டு நடைபெற்ற அம்மாவின் ஆட்சியின் சாதனைகளே 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நம்மை வெற்றி பெற வைத்தது. அதேபோன்று 2021-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தற்போதைய ஆட்சியின் சாதனைகளே நம்மை வெற்றி பெற வைக்கும்.

மாணவர்களின் நலனில் கழக ஆட்சி எப்போதுமே தனி கவனம் செலுத்தி வருகிறது புரட்சித்தலைவரின் ஆட்சியில் சத்துணவு திட்டமும், புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சியில் மடிக்கணினி திட்டமும் அதற்கு சான்றாகும். இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் பள்ளி மாணவர்களுக்கு மடிகணினி வழங்கும் திட்டங்கள் இல்லை.

இன்று தமிழகத்தில் ஒரே நேரத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரியை கொண்டு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நடத்திக்கொண்டு இருக்கின்றார். இங்கு இன்று இணைந்துள்ள நீங்கள் இந்த அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறி கழகம் 2021-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றிபெற பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் ஜி.ஜே.குமார், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கே.காசிநாதன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிச்சாமி, மாவட்ட மாணவர் பிரிவு செயலாளர் எஸ்.கலையரசன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஏ.கே.எஸ்.சுப்பிரமணியன், பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் கெமிக்கல் ஆர்.மாதவன், நகர துணை செயலாளர் வ.கந்தன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு பொருளாளர் எஸ்.வி.ராதாகிருஷ்ணன், நகர பொருளாளர் எஸ்.தனசேகரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.