தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியே நீடிக்க தமிழக மக்கள் விருப்பம் – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

சிவகாசி

கழக ஆட்சியே நீடிக்க தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை, திருச்சுழி உள்பட 7 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகம் சார்பில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சிவகாசி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளையும் கழகம் கைப்பற்ற வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்டளையின்படி நாம் செயலாற்ற வேண்டும். இந்த ஆலோசனை கூட்டம் மூலம் சட்டமன்ற தேர்தல் பணிகளை நாம் இப்போதே ஆரம்பித்து விட்டோம். எதிரிகளை வெல்வது தான் நமது ஒரே லட்சியமாக இருக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளையும் கழகம் கைப்பற்றியது என்ற வரலாற்று சாதனையை படைக்க வேண்டும்.

அதற்கு அடித்தளமாக அதிகமாக புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்கும் போது இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். ஏனென்றால் புதிய ரேஷன் கார்டு வாங்கி கொடுத்தாலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்து விட்டாலும் அவர்கள் நம்மை தலைமுறைக்கும் மறக்க மாட்டார்கள்.

இரட்டை இலை சின்னத்துக்கு அதிகமான வாக்குகளை பெறுவதற்கு இது உதவும். ஒரு வாக்குச்சாவடிக்கு 100 இளைஞர்களை புதிதாக சேர்க்க வேண்டும். நிச்சயமாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வாக்குகள் அனைத்தும் இரட்டை இலை சின்னத்திற்கு தான் கிடைக்கும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் இயங்கும் ஆட்சி தொடர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

கழகத்தில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். முதல்வர் எடப்பாடியார் தலைமையில் ஆட்சியும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியும் கட்டுக்கோப்புடன் இயங்கி வருகிறது. சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 276 பூத்களில் ஒரு பூத்துக்கு 100 ஓட்டு என்று சொன்னால் கூட 27 ஆயிரம் புதிய வாக்காளர்களை சேர்க்க முடியும். இதில் 20 ஆயிரம் புதிய வாக்காளர்கள் கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பார்கள். திமுகவில் இன்று வேலை செய்ய ஆளே கிடையாது.

விருதுநகர் மாவட்டத்தில் கழக ஆட்சியில்தான் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதிலும் தாமிரபரணி தண்ணீரை கொடுத்து கழக ஆட்சியில்தான். சிவகாசியில் அரசு கலைக்கல்லூரி, சாத்தூரில் அரசு கலைக்கல்லூரி, அருப்புக்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி, விருதுநகரில் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது கழக ஆட்சியில் தான். விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் ஏராளமான புதிய சாலைகள் அமைத்து கொடுத்துள்ளோம். ஏராளமான பள்ளிகளை தரம் உயர்த்தி கொடுத்துள்ளோம்.

திருத்தங்கல், சிவகாசியில் பைப்லைன் அமைப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. விரைவில் பைப் பதிக்கபட்டு அனைத்து சாலைகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் போட்டு முடிக்கப்படும். புதிய சாலையில் அமைக்கப்பட்ட பிறகு 100 வருடங்களுக்கு பைப்லைன் அமைக்க சாலையில் தோண்ட வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் விஸ்வநத்தம் பஞ்சாயத்து, நாரணபுரம் பஞ்சாயத்து, பள்ளப்பட்டி பஞ்சாயத்து, ஆணையூர் பஞ்சாயத்து, தேவர்குளம் பஞ்சாயத்து, செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்து உட்பட பஞ்சாயத்து சாலைகளும் புதிதாக போடப்பட உள்ளது.

திருத்தங்கல் நகராட்சிக்கு நகராட்சி அலுவலகம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ளது. சிவகாசி நகராட்சி அலுவலகம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைத்துள்ளோம்.. சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகம் புதிதாக திறந்து வைத்துள்ளோம். திமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு எந்த திட்டத்தையும் அவர்கள் கொண்டு வரவில்லை. தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இரண்டு முன்னாள் அமைச்சர்களும் இந்த மாவட்டத்திற்கு எந்த திட்டத்தையும் அவர்கள் கொண்டு வரவில்லை. அவர்கள் தொகுதிக்குள் ஏதாவது ஒரு அரசு கல்லூரியை கொண்டு வந்தார்களா.

திமுகவினர் ஒன்றுமே செய்யாமல் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க நினைக்கின்றனர். எல்லா மத வழிபாட்டு தலங்களுக்கும் நான் சென்று உள்ளேன். எந்த மதத்தினரும் எனது குங்குமம் பொட்டை அளித்து விட்டு உள்ளே வர சொல்லவில்லை. எல்லா மதங்களின் வழிபாட்டு முறைகளோடு நான் இணைந்து செயல்பட்டு வருகிறேன். இஸ்லாமியர்கள் ஓட்டுக்களும் திமுகவுக்கு கிடைக்காது, கிறிஸ்தவர்கள் ஓட்டும் திமுகவுக்கு கிடைக்காது. இந்துக்களும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். சிந்திக்கின்ற திமுகவினர் கூட அண்ணா திமுகவிற்குதான் வாக்களிக்கப் போகிறார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஸ்டாலின் நாடகம் போடுகிறார். ஸ்டாலின் நாடகம் தமிழகத்தில் இனி எடுபடாது. திமுக இன்று ஒரு அறைக்குள் கம்ப்யூட்டர் பெட்டிக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேக்கப் போட்டு ஸ்டாலின் நடித்துக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர். பாட்டை வைத்து நிறைய பேர் பட்டம் வாங்கி இருக்கின்றனர். புரட்சித்தலைவர் உருவாக்கிய இந்த கட்சி புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது.

32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆளுகின்ற வரலாற்றை உருவாக்கிய தலைவி புரட்சித்தலைவி அம்மா அவர்கள். சாதாரண தொண்டனையும் அரியணையில் அமர வைத்து அழகு பார்க்கும் கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். தமிழன் என்று சொல்வதற்கு ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் கிடையாது. தமிழ் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. முள்ளிவாய்க்காலில் 3 லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்கள் காங்கிரஸ், திமுகவினர்.

ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளை அளித்தது திமுக. ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே வீட்டிற்கு சென்று விருந்தோம்பி விட்டு அவர் கொடுத்த பரிசுகளை வாங்கி வந்தது திமுக குடும்பம். தமிழ் துரோகத்தை தமிழ் இன துரோகத்தை எப்போதும் அண்ணா திமுக ஆதரிக்காது. கையில் எடுக்காது.

வரும் பொதுத்தேர்தலில் திமுகவை கருவறுக்கும் வகையில் திமுகவிற்கு வாக்காளர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை முகவர்கள் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக பணியாற்றி அண்ணா திமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி பெற்றார் என்ற சாதனையை நாம் படைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.