சிறப்பு செய்திகள்

கழக ஒருங்கிணைப்பாளர்கள் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்

சென்னை

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கழகம் சார்பில் ஜூலை 28-ந்தேதி உரிமை முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் கழக உடன்பிறப்புகள் தங்களின் வீடுகளின் முன்பு பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தனர்.

கழக ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோளை ஏற்று நேற்று தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் கருப்பு சட்டை அணிந்து தங்களது இல்லங்களின் முன்பு பதாகைகளை ஏந்தி தி.மு.க. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தின் முன்பு பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் செய்தார்.

அவருடன் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் ேதர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவருடன் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் மற்றும் நிர்வாகிகள், குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் நகர செயலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவருடன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியிலும், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் முன்னாள் சபாநாயகர் ப.தனபால், நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், கோவை குனியமுத்தூரில் எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,

திருச்சி தென்னூரில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திருப்பூரில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், நாகையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, பண்டாரவிளையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதேபோல் அனைத்து மாவட்ட செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்களும் தங்களது இல்லங்கள் முன்பு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற இந்த போராட்டங்களில் பங்கேற்ற கழக நிர்வாகிகள் தமிழக மக்களின் உரிமைக்குரலாக வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி விண்ணதிர கோஷங்களை எழுப்பினர்.

அண்ணாச்சி, அண்ணாச்சி சொன்னதெல்லாம் என்னாச்சி?
விண்ணை முட்டுது விலைவாசி மக்கள் நிலையை நீ யோசி!
உண்மையை மறைத்து, உண்மையை மறைத்து ஊர், ஊராய்
பொய்யை சொல்லி, ஊர், ஊராய் பொய்யை சொல்லி,
அள்ளிய ஓட்டால் ஆட்சி செய்யும் அள்ளிய ஓட்டால் ஆட்சி செய்யும்
தி.மு.க.வே, தி.மு.க.வே வாக்குறுதிகளை நிறைவேற்று,
வாக்குறுதிகளை நிறைவேற்று
பெட்ரோல் விலை என்னாச்சு! பெட்ரோல் விலை என்னாச்சு!
விடியல்கார அண்ணாச்சி! டீசல் விலை என்னாச்சி!
ஏறுதே, ஏறுதே விஷம்போல் விலை ஏறுதே
சாயுதே, சாயுதே, மக்களின் வாழ்க்கைத்தரம் சாயுதே!
ஏரோட்டும் விவசாயி,
ஏங்கித் தவிக்கும் விவசாயி
வாடி நிற்கும் விவசாயி,
வாழ்க்கைக்கு வழிசொல் தி.மு.க.வே!
மு.க.ஸ்டாலின் அண்ணாச்சி, மக்கள் நலனை மறந்துவிட்டு
புழிவாங்கப் புறப்பட்டது நியாயம் தானா?
போடாதே, போடாதே
பொய் வழக்கு போடாதே
அஞ்சாத சிங்கங்கள் நாங்களென்போம்,
ஆயிரம் வழக்கை, தி.மு.க. அரசு போட்டாலும்,
அஞ்சாமல் அவற்றை சந்திப்போம்! சந்திப்போம்!
மேகதாதுவில் அணையா? – இனி
காவேரி தண்ணீர் கனவா?
திமுக அரசே, திமுக அரசே
காவேரி நதியை காப்பாற்று!
நடுவர் மன்ற உத்தரவை, உடனே இங்கே நிறைவேற்று!
தமிழக அரசே தமிழக அரசே மூட்டை, மூட்டையாய்
நெல்மணிகள் நனைந்து முளைப்பதைப் பாராயோ?
கண்ணீரில் மிதக்கிறான் விவசாயி, தண்ணீரில் மிதக்குது
நெல்மணிகள்
சொன்னதை செய் திமுகவே
நீட் தேர்வை ரத்து செய்!
ஏமாற்றாதே, ஏமாற்றாதே
தமிழ்நாட்டு மாணவர்களை ஏமாற்றாதே!
விடியல், விடியல் என பாடி –இன்று
வீதிகள் தோறும் மரணமடி
கொரோனாவை விடவும் கொடுமையன்றோ
திறமையற்ற இந்த ஆட்சி!
கொரோனா நோய்க்கு சிகிச்சை கொடு!
உண்மையைச் சொல்ல பயிற்சி எடு!

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.