சிறப்பு செய்திகள்

கழக தேர்தல் பிரச்சாரம் இன்று தொடக்கம்

சென்னை

தமிழக சட்டசபைக்கு 2021-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மாவட்ட கழக செயலாளர்கள், அமைச்சர்கள், மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோருடன் தலைமை கழகத்தில் அடிக்கடி ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த அக்டோபர் 7-ந்தேதி அறிவித்தார். முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் தமிழகம் முழுவதும் கழகத்தினர் உற்சாகம் அடைந்துள்ளனர். கழகத்தின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் என்று சூளுரைத்து தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிரந்தரமாய் வீற்றிருக்கும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியின் புரட்சி செயல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கிய அமைதி, வளம், வளர்ச்சி என்னும் தாரக மந்திரத்தின்படி நடைபெறும் நல்லாட்சியை மீண்டும் மலர செய்து தமிழ்நாட்டை தொடர்ந்து வெற்றிப்பாதையில் நடைபோட செய்திடும் வகையிலும் கழகத்தின் தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் சென்னையில் டிசம்பர் 27-ந்தேதி நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.

அதன்படி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (27-ந்தேதி) காலை 10 மணிக்கு கழகத்தின் தேர்தல் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பங்கேற்று கழகத்தின் தேர்தல் பிரச்சார பணிகளை தொடங்கி ைவக்கின்றனர்.

2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல் களத்தில் கழகம் வெற்றிபெற இந்த பிரச்சார பொதுக்கூட்டம் போர் முழக்கமாக இருக்கும் என்பதால் அனைத்து தரப்பினரும் கழக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்ைத உற்று நோக்கியுள்ளனர். மேலும் ஒருங்கிணைப்பாளர்களின் எழுச்சி உரையை கேட்க கழக நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும், பொதுமக்களும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் குவிந்துள்ளனர்.

இதற்கிடையில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் கழக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட முன்னேற்பாடு பணிகளை நேற்று காலை கழக அமைப்பு செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கழகம் ஒரு வெற்றிகரமான இயக்கம், எஃகு கோட்டை. கழகத்தின் பொதுக்கூட்டம் என்பதால் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வார்கள் என்றார்.

மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

10 தேர்தல்களில் 7 தேர்தல்களில் நாங்கள் வென்றுள்ளோம். அவ்வளவும் அறுதிப் பெரும்பான்மையில் தான் வென்றுள்ளோம். திமுக மாதிரி மைனாரிட்டி அரசாக நாங்கள் தொங்கிக்கொண்டு ஆட்சி நடத்தவில்லை.
தி.மு.க. 2006-ல் 96 இடங்கள் பெற்று ஆட்சி செய்தார்கள். அதுமாதிரி நிலையை தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு தர மாட்டார்கள். எங்களை பொறுத்தவரை அறுதிப் பெரும்பான்மையோடு கழகம் ஆட்சி செய்யும் நிலை உருவாகும் என்ற அடிப்படையில் தீர்ப்புகள் இருக்கும்.

எங்கள் தலைவரை நாங்கள் தானே தேர்வு செய்வோம். தமிழகத்தை பொறுத்தவரையில் கழகத்தின் தலைமையிலான கூட்டணி தான். கழகம் பெரும்பான்மை பெற்று கட்சி அறிவித்த முதல்வராக மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி தான் வருவார். நிராகரிக்கப்பட்டவர்கள் மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது பகல் கனவாக முடியும், காட்டாற்று வெள்ளம் போல் கழகம் ஆட்சியை பிடிக்கும்,

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்