தற்போதைய செய்திகள்

கழக பிரமுகரின் பேக்கரி சூறை – தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் கைது

மதுரை

மதுரை வாடிப்பட்டியில் தேர்தல் முன்விரோதம் காரணமாக கழக பிரமுகரின் பேக்கரியை அடித்து உடைத்து சேதப்படுத்திய தி.மு.க.வை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த கழக பிரமுகர் சோணை. இவர் கடந்த 14 வருடங்களாக வாடிப்பட்டியில் பேக்கரி கடையை நடத்தி வருகிறார். தற்போது கொரோனா முழு ஊரடங்கால் கடை அடைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திமுக மாணவர் அணி துணைச்செயலாளர் அசோக், சோழவந்தான் பகுதியை சேர்ந்த பெரியமருது, கரட்டுபட்டியை சேர்ந்த அறிவுச்செல்வன் உள்ளிட்ட சிலர் கையில் பட்டா கத்தியுடன் பேக்கரி கடை வாசலில் நுழைந்தனர். பேக்கரி கடை முன் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும், டேபிள், சேர்களை தூக்கி வீசினர்.

அதோடு அந்த வளாகத்திலுள்ள அரசு வங்கியின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியதோடு இரு சக்கர வாகனங்களையும் அடித்து உடைத்து விட்ட இரு சக்கர வாகனத்தில் தப்பிஓடி விட்டனர்.

இது தொடர்பாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.

அதில் திமுக பிரமுகர் அசோக், பெரிய மருது அறிவுச்செல்வன் உள்பட சிலர் பேக்கரியை அடித்து உடைப்பது பதிவாகி இருந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கழக பிரமுகரின் பேக்கரி கடையை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கழக பிரமுகரின் பேக்கரி கடையை பட்டா கத்தியால் அடித்து நொறுக்கி சேதப்படுத்திய திமுக பிரமுகரின் செயல் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.