சிறப்பு செய்திகள்

கழக 49-வது ஆண்டு விழா கோலாகல கொண்டாட்டம்

சென்னை

கழகத்தின் 49-வது ஆண்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் கட்சி கொடியேற்றி கொண்டாடப்படும் என்றும், இதில் கழக நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர்.

அதன்படி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள தலைமை கழகத்தில் நேற்று கழகத்தின் 49-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., கழக நிரந்தரப் பொதுச் செயலாளர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கழக கொடியேற்றி வைத்து அங்கு திரளாக குழுமியிருந்த கழக நிர்வாகிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் இனிப்பு வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அம்மா அவர்களின் பொற்கரங்களால் கல்வி நிதியுதவி பெற்றவர்கள் உள்பட எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்து வரும் 22 மாணவ, மாணவிகள், எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வரும் 1 மாணவி, பி.டி.எஸ். மற்றும் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வரும் 5 மாணவ, மாணவிகள் என 28 பேருக்கு கழகக் கணக்கில் இருந்து மொத்தம் 26,39,778 ரூபாய்க்கான வரைவோலைகளை சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளிடம் நேரில் வழங்கி சிறந்த முறையில் கல்வி பயின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் சேவைகள் பலவற்றை செய்திட வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் நல்லாசி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தலைமைக் கழக வளாக நுழைவு வாயிலில் வரவேற்பு முகப்பு அமைக்கப்பட்டும், சாலையின் இரு மருங்கிலும் கழக கொடித் தோரணங்களும் அழகுற அமைக்கப்பட்டும், மங்கள இசை முழங்கவும் விழாக் கோலம் பூண்டிருந்தது.

இதேபோல் தமிழகம் முழுவதும் கழகத்தின் 49-வது ஆண்டு தொடக்க விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அனைத்து மாவட்டக் கழக செயலாளர்களும் தங்களது பகுதிகளில் கொடியேற்றி எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருவுருவ சிலைகள் மற்றும் படத்திற்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் மாநிலம் முழுவதும் கழக நிர்வாகிகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் கழகத் தொண்டர்கள் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர். மேலும் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு நல்லத்திட்ட உதவிகளை வழங்கியும் கழகத்தின் 49-வது ஆண்டு விழாவை உற்சாகமாக கொண்டாடினர். பல்வேறு இடங்களில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இது தவிர புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் கழகத்தின் 49-வது ஆண்டு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அம்மாநில நிர்வாகிகள் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.